பஸ் கவிழ்ந்து கோர விபத்து
இரண்டு கர்ப்பிணிகள் உட்பட 52பேர் பலி?
பிரசவமாகி குழந்தையும் இறந்த பரிதாபம்
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற கோரமான பஸ் விபத்தில் இரு கர்ப்பிணிகள் உட்பட 52 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஜகித்யாலா மாவட்டத்தில் உள்ள ராம்சாகர், சனிவாரம் பேட்டா, பெத்தபல்லி, ஹிம்மத் பேட்டா ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், பெண்கள், முதியோர் ஆகியோர் கொண்டகட்டு பகுதியில் இருந்து ஜகித்யாலாவுக்கு அரசு பஸ்ஸில் இன்று (செவ்வாய்கிழமை) காலை சென்றுக்கொண்டிருந்தனர். அந்த பஸ்ஸில் கொண்டகட்டு பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் பக்தர்கள், பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் என பலதரப்பட்டவர்கள் பயணம் செய்தனர்.
இதில் 80 பயணிகள் சென்றதால், பலர் நின்று கொண்டு பயணம் செய்ய நேரிட்டது. அப்போது, கொண்டகட்டு மலைப்பகுதில் இருந்து வரும் வழியில், கடைசி வளைவில் வந்த போது, அங்கிருந்த வேகத்தடை மீது பஸ் வேகமாக சென்றதால், நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் 4 முறை புரண்டு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தின் காரணமாக பலத்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, பஸ்ஸில் பயங்கர மரண ஓலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், தாங்களாகவே ஓடிச் சென்று, பஸ்ஸில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்த பஸ்ஸின் முன் பாகம் பயங்கரமாக சேதமடைந்தது. பலர் பஸ்ஸின் இருக்கைகளுக்கிடையே சிக்கி உயிரிழந்திருந்தனர்.
, படுகாயமடைந்த 30க்-கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 19 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 52ஆக உயர்ந்தது. இறந்தவர்களில் 25 பேர் பெண்கள், 11 பேர் ஆண்கள் மற்றவர்கள் அனைவரும் 12 வயதுக்கு உட்பட சிறுவர், சிறுமியராவர். படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த கோர விபத்தில் 2 கர்ப்பிணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் 9 மாத கர்ப்பிணியாவார். இவர், பஸ் விபத்தால் அதிர்ச்சி அடைந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். இதில், குழந்தை பிரசவமும் ஏற்பட்டு, பிறந்த குழந்தையும் இறந்து விட்டது. இதேபோன்று, 7 மாத கர்ப்பிணியும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் அரசு, தனியார் ஊழியர்களும் உயிரிழந்தனர்.
ஒரு வளைவில் எதிரே வந்த ஆட்டோவை மோதாமல் இருக்க, வேகத்தடை மீது அதே வேகத்தில் பஸ்ஸை இடது புறம் திருப்பியதால் நிலை தடுமாறி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததாக பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஒட்டுநருக்கு இரு கால்களும் உடைந்ததால், அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
0 comments:
Post a Comment