நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே
சிஐடிக்கு அறிவித்தார் அட்மிரல்
வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னரே, தனது அதிகாரபூர்வ பயணம் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கோட்டே நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நேற்றுக்காலை 10
மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்பாக, வாக்குமூலம் அளிக்க வருமாறு அட்மிரல் விஜேகுணரத்னவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் கட்டார் விமான சேவை மூலம், மெக்சிகோவுக்கு புறப்பட்டுச் சென்றிருந்தார். வரும் 19ஆம் திகதியே அவர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
அரசின் பிரதிநிதியாக மெக்சிகோவின் தேசிய தின நிகழ்வுகளில் அட்மிரல் விஜேகுணரத்ன பங்கேற்கவுள்ளார்.
இந்தப் பயணம் குறித்து, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்று நாள் ஒன்றை தருமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் பேச்சாளர் கூறியிருந்தார்.
ஆனால், அட்மிரல் விஜேகுணரத்ன நேற்று அதிகாலையே வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார் என்றும், அதன் பின்னர் நேற்றுக் காலையே அதுபற்றி தமக்கு தெரியப்படுத்தப்பட்டது என்றும் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி கூறியுள்ளார்.
‘எதிர்வரும் 19ஆம் திகதிக்குப் பின்னர் வாக்குமூலம் பெறுவதற்கு மாற்று நாள் ஒன்றை அவர் கோரியிருக்கிறார்.
அதிகாரபூர்வ பயணமாக அவர் சென்றுள்ளார் என்பதை கருத்தில் கொண்டு, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு புதிய திகதி நிச்சயிக்கப்படும்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment