பிச்சை போடாமல், திண்மக் கழிவகற்றும்
வாகனத்தை வாங்கிக் கொடுத்திருக்கலாம்....



சில அரசியல்வாதிகள் சில ஒதுக்கீடுகளை செய்துவிட்டு, தனது சொந்த நிதியலிருந்து வழங்கப்பட்டது என்று கதையளப்பது வழமை.
மக்கள் செலுத்தும் வரியிலிருந்து அல்லது மக்களை அடமானமாக வைத்துப் பெறப்படும் நிதியிலிருந்து வழங்கப்படும் ஒதுக்கீடுகள் மக்களை சென்றடையத்தான் வேண்டும்.
ஆனால் அதனை வைத்து எமது பகுதியில் சில்லறை அரசியல் செய்ய முற்படுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாது.
எமது ஊருக்கு நிருவாக அலகான பிரதேச செயலகம் இருக்கிறது. அபிவிருத்திப் பணிகள் அதனூடாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில் பிரதேச செயலகமானது, செய்யப்படவேண்டிய அபிவிருத்தி வேலைகளை பட்டியலிட்டு அதனூடாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
எமது நகர சபைப் போராட்டம் மழுங்கடிக்கப்படவும் கூடாது. அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் எமக்கான நிதிகள் கைநழுவிப் போகவும் கூடாது. அதனால் தான் இந்த விடயத்தில் பிரதேச செயலகமே முக்கிய பங்காற்ற வேண்டும் என்பது எனது கருத்தாகும்.
அவ்வாறில்லாமல் இன்று நடந்தது போன்று எலும்புத்துண்டு போடுவது போன்ற செயற்பாடானது எமது ஒற்றுமையை சீர்குலைப்பதற்காகவும், எமது நகர சபைப் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்படும் சதிமுயற்சி என்பதை மருதூர் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
உண்மையில் ஊருக்கு நல்லது செய்ய பிரதியமைச்சர் நினைத்திருந்தால், பள்ளிகளுக்கு பொறுக்கிப் போடுவதைத் தவிர்த்து, திண்மக் கழிவுகளை அகற்றுவதற்காக எமக்கென்று ஒரு வாகனத்தை வாங்கிக் கொடுத்திருக்கலாம்.
இந்த ஓரிரு இலட்சங்களுக்காக ஊரின் தாகத்தை மறந்து, ஊரின் இத்தனை போராட்டங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக சென்ற சில பள்ளிவாசல்களின் சில நிருவாகிகள், இந்த நிதி கிடைக்காவிட்டால் அவர்களின் மகல்லாவாசிகள் தொழுவதற்கு இடமேயில்லை என்ற நிலையில் இருக்கிறார்கள் போலும். வெட்கப்படவேண்டிய விடயம்.
அத்தனை பள்ளிவாசல்களும் எமது மகல்லாவாசிகளின் உழைப்பினால் கட்டப்பட்டது. இனியும் இருப்பதை அவ்வப்போது செய்து முடிப்பதற்கு எமது மக்கள் தாராளமாக உதவி செய்வார்கள்.
ஆனால் ஒரு சில பள்ளிவாசல்களும் அதன் சில நிருவாகிகளும் நடந்துகொண்ட விதமானது அருவருப்பான விடயமாகும்.
அப்படியும் எமக்கான நிதி தான் என்ற அடிப்படையில், பிரதேச செயலகத்தினூடாக அந்த அரச நிதியைப் பெற முயற்சி செய்திருக்க வேண்டும்.
அது தான் எமது நகர சபைக்கான கோரிக்கையின் அழுத்தத்தை தொடர்ந்தும் வெளிப்படுத்த உதவியிருக்கும்.
இவ்வாறு நடந்துகொண்ட பள்ளிவாசல்களுக்கு எதிராக மக்கள் மயப்படுத்தப்பட்டு பெரிய பள்ளிவாசலினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இல்லையேல், இது எமக்கு பின்னடைவையே உண்டாக்கும்.

-    டாக்டர் நாகூர் ஆரிப்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top