தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக
மட்டக்களப்பில் ஹர்த்தால்
களுவன்கேணி பிரதேசத்தில்
அரச பஸ் மீது கல்வீச்சு தாக்குதல்

தமிழ்,முஸ்லிம் உறவு சீர்குலைவதை கண்டித்து கரிநாள் அனுஷ்டிப்பு


மட்டக்களப்பு புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிராகவும் அதனை நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (07) வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிராகவும் அதனை நிறுத்துமாறு கோரியுமே இந்த ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரச பஸ் மீது களுவன்கேணி பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் வண்டி மீது கிண்ணையடி பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வாகனத்தின் ஒரு பகுதி கண்ணாடி சேதமடைந்துள்ளது.
இதேவேளை, முஸ்லிம் விரோத செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியும் தமிழ் முஸ்லிம் உறவு சீர்குலைவதை கண்டித்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் கரி நாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் காரணமாக இப்பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்த ஹர்த்தால் காரணமாக மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு நகர் உட்பட மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் பொது சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
சில பிரதேசங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததுடன் சில பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் சமூக மளிக்கவில்லை.
அரச தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்ட போதிலும் அதிகாரிகள் வருகை குறைவாக காணப்பட்டன. அரச தனியார் வங்கிகளும் மூடப்பட்டிருந்தன.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டி சேவையிலீடுபட்ட போதிலும் தனியார் பஸ் வண்டிகள் மிக குறைவாக சேவையில் காணப்பட்டன. மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பிட நிலையம் வெறிச்சோடிக்காணப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, மற்றும் பதுளை வீதி, மட்டக்களப்பு கல்லடி, கிராண்குளம், நாவற்குடா ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டு வாகன போக்கு வரத்திற்கான தடைகள் ஏற்படுத்தப்ட்ட போதிலும் பொலிஸார் ஸ்தத்திற்கு விரைந்து அவைகளை அகற்றி வாகனப் போக்குவரத்தை சீர்படுத்தினர்.













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top