நிலத்தை இழந்து தொழிலையும் பறிகொடுத்து
தவிக்கும் ஒலுவில் பிரதேச மக்கள்
ஒரு காலத்தில் மீன்பிடித் தொழிலுக்கு பேர்பெற்ற இடமாக ஒலுவில் கடற்கரைப் பகுதி காணப்பட்டது. நூற்றுக்கணக்கான தோணிகளும், இயந்திரப் படகுகளும் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தன.
ஒலுவில் பிரதேசத்திலுள்ள பெருமளவு குடும்பங்கள் மீன்பிடித் தொழில் மூலமாகக் கிடைத்த வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி அம்மக்களுடைய வாழ்வாதாரம் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியும் வருகின்றனர்.
ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் ஒன்றை நிறுவிய பின்னர்தான் ஆரம்பமான பாரிய கடலரிப்பினால் அப்பிரதேசத்தின் காணிகளையும், ஆயிரக்கணக்கான தென்னை மரங்களையும் கடல் காவு கொண்டுள்ளது. இந்த தென்னை மரங்களிலிருந்து கிடைத்த தேங்காய் மற்றும் ஏனைய பொருட்கள் மூலம் வருமானம் பெற்று வந்தவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலரிப்பைத் தடுப்பதற்காக கடலின் உள்ளேயும், கரையிலும் பெரிய பாறாங்கற்கள் போடப்பட்டுள்ளதால், மீனவர்களின் தோணிகள், வள்ளங்கள், கடலுக்குள் சென்று வருவதில் பல்வேறு சவால்களுக்கு மீனவர்கள் முகம்கொடுத்து வருகின்றனர்.
ஒலுவில் பிரதேசத்தை அண்டிய பாலமுனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேச மீனவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துறைமுகம் ஒன்றை நிறுவிய பின்னர்தான் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் அங்கலாய்க்கின்ற வேளையில், இப்பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அவர்கள் பல தடவை போராட்டங்களையும் நடாத்தியுள்ளனர். ஒலுவிலில் துறைமுகம் அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அங்குள்ள மீனவர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பது மீனவர்களுடைய நீண்ட கால குற்றச்சாட்டாகும்.
0 comments:
Post a Comment