இலங்கையில் தமிழ் மொழியை விழுங்கிய சீன மொழி
நியாயப்படுத்தும் நியூசிலாந்து நிறுவனம்


நியூசிலாந்தின் பிரபல பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றினால், இலங்கையில் சந்தைப்படுத்தப்படும், வெண்ணெய் பொதியில், தமிழ் மொழி நீக்கப்பட்டு, சீன மொழியில் அச்சிடப்பட்டுள்ளது கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.
முன்னதாக குறிப்பிட்ட நிறுவனத்தின் பால் பொருள் பொதிகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டிருக்கும்.
எனினும், தற்போது குறித்த நிறுவனத்தினால் சந்தைப்படுத்தப்பட்டுள்ள வெண்ணெய்ப் பொதிகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டு, சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றுடன் சீன மொழி அச்சிடப்பட்டுள்ளது.
இது இலங்கையின் தேசிய மொழி கொள்கையை மீறுகின்ற செயல் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சீன மொழி அச்சிடப்பட்டுள்ளது பிரச்சினையல்ல, ஆனால், உள்ளூர் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தமிழ் மொழியை சேர்க்கும் வரை குறிப்பிட்ட நிறுவனத்தின் உற்பத்தியை தமிழ் நுகர்வோர், வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என்றும், மனோ கணேசன் முகநூல் பதிவு ஒன்றில் கோரியுள்ளார்.
எனினும், குறிப்பிட்ட நியூசிலாந்து நிறுவனம் தமது செயற்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளது.
தமது வெண்ணெய்ப் பொதி, நியூசிலாந்திலேயே தயாரிக்கப்பட்டு, பொதியிடப்பட்டு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அதே பொதியே இலங்கைக்கு அனுப்பப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பொதுவாக இந்த நாடுகளில் பேசப்படும் மொழி தமது பொதிகளில் அச்சிடப்பட்டிருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,அமைச்சர்  மனோ கணேசன் தனது முகநூலில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
இது ஒரு தனியார் நிறுவனம். அரச காரியாலயம் அல்ல.
தமிழையும் சேர்த்துக்கொள்ளும்படி, இந்த நிறுவனத்துக்கு, எழுத்து மூலம் அறிவுறுத்தும்படி, அரச கரும மொழிகள் ஆணைக்குழு தலைவருக்கு பணிக்கிறேன்.
ஆனால் அதே வேளை இதை இங்கே சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்கள் தமிழில் எழுதப்படாத இந்த பொருளை வாங்க வேண்டாம் என ஒரு பகிஸ்கரிப்பு பிரசாரத்தையும் நடத்தலாமே.
எல்லாவற்றுக்கும் அமைச்சரை சுட்டிக்காட்டிவிட்டு இருப்பதை விட தமிழன்பர்கள் வித்தியாசமாக சிந்திக்கவும் வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top