மாற்றுத்திறனாளி மாணவனுக்கு ஜனாதிபதியினால்
10 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பு
கல்வியில் விசேட திறமைகளை வெளிப்படுத்தி வரும் கொழும்பு கல்கிஸை விஞ்ஞான கல்லூரியின் தெவின் இதுசர ரத்னாயக்க என்ற மாணவனின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் நவீன சக்கர நாற்காலி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக 10 இலட்சம் ரூபாவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
கல்கிஸை விஞ்ஞானக் கல்லூரியின் பரிசளிப்பு விழா அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. 2017ஆம் ஆண்டு க.பொ.த (உ-த) பரீட்சையில் வணிகப் பிரிவில் 03 ஏ சித்திகளைப் பெற்று பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுள்ள தெவின் இதுசர ரத்னாயக்க என்ற மாணவன் ஜனாதிபதியிடமிருந்து விருதினைப் பெற்றுக்கொண்டார்.
சக்கர நாற்காலியில் வருகை தந்த இம்மாணவனுடன் சுமூகமாக கலந்துரையாடிய ஜனாதிபதி , அம்மாணவனுக்கு என்ன தேவை என்பதை கேட்டறிந்தபோது, தனது கல்வி நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் மின்சாரத்தில் செயற்படும் சக்கர நாற்காலி ஒன்றை பெற்றுத்தந்தால் வசதியாக இருக்குமென்று கூறினார். அச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அம்மாணவனுக்கு மின்சாரத்தில் இயங்கும் சக்கர நாற்காலி ஒன்றை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
அந்த உறுதிமொழியை நிறைவேற்றி இந்த நிதி அன்பளிப்பை ஜனாதிபதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. தனது பெற்றோருடன் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த மாணவன் தெவின் இதுசர ரத்னாயக்க குறித்த காசோலையை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
0 comments:
Post a Comment