இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு
பலி எண்ணிக்கை 1000 தாண்டியது
   
இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலுக்குள்ளான சுலாவெசி மாகாணத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000- தாண்டி விட்டது.
இந்தோனேசியாவில் சுலாவெசி மாகாணத்தில் கடந்த 27 ஆம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பலு என்ற கடற்கரை நகரத்தை சுனாமி பேரலைகள் தாக்கி துவம்சம் செய்தன.
பலு நகரில் நடைபெற்ற கடற்கரை திருவிழாவில் பங்கேற்க ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிக்கி உயிரிழந்தனர். கடற்கரையில் கூடியிருந்தவர்களை ஆழிப் பேரலைகள் சுருட்டியதால் அதில் உயிரிழந்தவர்களின் பிணங்கள் தெருவெங்கும் சிதறி கிடந்தன.
மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சுனாமி தாக்குதல் மற்றும் நிலநடுக்கத்தில் பலு நகரில் 2 ஹோட்டல்கள், ஒரு வர்த்தக நிறுவனம் (மால்) இடிந்து தரை மட்டமானது.
அதில் ஒரு ஹோட்டலில் இருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு மேலும் 50 பேர் உயிருடன் சிக்கி தவிப்பது தெரியவந்தது அவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இடிந்து கிடக்கும் வர்த்தக நிறுவனத்தின் உள்ளே சிக்கியிருப்பவர்களின் உறவினர்கள் வெளியே கண்ணீருடன் காத்து கிடக்கின்றனர்.
சுனாமி தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 832 என இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் சுலாவெசி மாகாணத்தில் மட்டும் மரண எண்ணிக்கை 1000- தாண்டி விட்டது. இன்னும் நிலநடுக்கம் தாக்கிய சில பகுதிகளிலும் மீட்பு பணி நடைபெற வேண்டியுள்ளது. இங்கு 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என துணை ஜனாதிபதி ஜுசுப் கல்லா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சுனாமி தாக்குதலில் சின்னா பின்னமான பலு நகருக்கு ஜனாதிபதி ஜோகோ விடோடோ நேற்று நேரில் சென்றார். அங்கு இடிந்து தரைமட்டமான அடுக்கு மாடியிருப்புக்கு சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர் இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் துயரங்களை நான் அறிவேன். தகவல் தொடர்பு உட்பட அனைத்தும் மிக குறுகிய காலத்தில் சரி செய்யப்படும் என்றார். அப்போது அங்கு திரளாக கூடியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாங்கள் பசியால் வாடுகிறோம். எங்களுக்கு உணவு தாருங்கள். ராணுவ வீரர்கள் ரேசன் முறையில் குறிப்பிட்ட அளவு உணவே வழங்கினார்கள் என தெரிவித்தார். பலர் மாயமாகிவிட்டதாகவும் கூறினர்.
சுனாமி தாக்குதலில் பலு நகரமே முற்றிலும் அழிந்த நிலையில் உள்ளது. அதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் உணவு பொருட்கள் எடுத்து வர முடியாத நிலை உள்ளதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே பசியை போக்க மார்க்கெட்டுகளில் புகுந்த பொதுமக்கள் கடைகளை உடைத்து உணவு பொருட்களை கொள்ளையடித்து வருகின்றனர். சூப்பர் மார்கெட்டுகளில் நுழையும் ஆண்களும், பெண்களும் பிளாஸ்டிக் கூடைகளில் தங்களுக்கு தேவையான பிஸ்கெட்டுகள், பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து செல்கின்றனர். குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குடிநீர் பாட்டில்களும் கொள்ளைக்கு தப்பவில்லை.
சடலங்கள் குவியல் குவியலாக கிடப்பதால் அவை அழுகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சடலங்கள் நேற்று ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
இதற்கிடையே பேரிடர் மீட்பு பணிக்கு ரூ.275 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நிதி மந்திரி ஸ்ரீமுல்யான் இந்திராவதி தெரிவித்துள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top