ரூபா 1.3 கோடி பெறுமதியான ஹெரோயின்
போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது



சுமார் ரூபா ஒரு கோடி 30 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் பிரிவு (CCD) அதிகாரிகளினால் அவர், இன்று (18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஹைபிரிட் சுத்தா’  என அழைக்கப்படும் 37 வயதான, சமீர ரசாங்க குணசேகர எனும் சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையை அடிப்படையாக கொண்ட நோக்கத்தில், பாதுக்கை, அங்கம்பிட்டிய, நெட்டிஒலுவ எனும் பிரதேசத்தில் வாடகைக்கு பெற்றிருந்த வீடொன்றிலிருந்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, குறித்த சந்தேகநபரிடமிருந்து 1.1 கிலோகிராம் ஹெரோயின், ரூபா ஏழரை இலட்சம் பணம் மற்றும் 2 கார்கள் கைப்பற்றப்பட்டதாகவும், குறித்த ஹெரோயின் போதைப் பொருளின் மதிப்பு ரூ 13 மில்லியனுக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் ஹிம்புட்டான, அங்கொட எனும் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொடை சமிந்த என்பவரின், உதவியாளர் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தல் வேளையின்போது 2015 ஜூலை 31 ஆம் திகதி, ப்ளூமெண்டல்  பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பெண் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேரை கொலை செய்ததோடு மேலும் 12 பேரை காயங்களுக்குள்ளாக்கிய சம்பவத்தின் சந்தேகநபர் இவர் என்பதோடு அது தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top