ரயில் தடம்புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழப்பு
தைவான் நாட்டில் சம்பவம் (படங்கள்)
தைவான் நாட்டின் இலான் பகுதியில் நேற்று எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 170-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
தைவான் நாடின் வடகிழக்கு பகுதியில் உள்ள இலான் கவுன்ட்டியில் கடலோரத்தை ஒட்டிச் செல்லும் விரைவு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரான தைபெயில் இருந்து டைட்டுங் நகரை நோக்கிச் செல்லும் ரயில்கள் இந்த பாதை வழியாக செல்கின்றன.
இந்நிலையில் தைபெய் நகரில் இருந்து இந்த பாதை வழியாக நேற்று சென்ற புயுமா எக்ஸ்பிரஸ் ரயில் டைட்டுங் நகரை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் க்சின்மா நிலையத்தின் அருகேயுள்ள டுங்ஷான் புறநகர் பகுதியை நெருங்கியபோது தண்டவாளத்தில் விலகிச் சென்ற அந்த ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
அந்த ரயிலின் முன்பகுதியில் இருந்த 8 பெட்டிகள் முற்றிலுமாக சரிந்து விழுந்த நிலையில், பின்னால் இருந்த 5 பெட்டிகள் எதிர்திசையை நோக்கி கிடந்தது.
360- க்கும் அதிகமான பயணிகளை சுமந்துவந்த அந்த ரெயில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர். 170-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு ஏற்றி செல்லப்பட்டனர்.
தடம்புரள்வதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவே அந்த ரயில் இயல்பு நிலைக்கு மாறாக குலுங்கியும், அதிர்ந்தும் ஓடிக் கொண்டிருந்ததாக அதில் வந்த சில பயணிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தைவான் நாட்டின் பெண் ஜனாதிபதி டிசார் இங்-வென் இரங்கல் தெரிவித்துள்ளார்.









0 comments:
Post a Comment