தரம் 5 புலமைப்பரிசில் கட்டாயமல்ல
புலமைப்பரிசில் கட்டாயமாக்கப்பட்ட
சுற்றுநிருபம் இரத்து


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவது அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமல்ல என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் தோற்றுவது  அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமானது என ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில்  பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட கல்வியியலாளர்கள், சிறுவர் தொடர்பான உளவியலாளர்கள், சிறுவர் தொடர்பான வைத்திய நிபுணர்கள்  உள்ளிட்டோரை கொண்ட குறித்த மீளாய்வுக் குழுவின் சிபாரிசுகளை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இன்றைய தினம் (25) கல்வியமைச்சில் கூடியதோடு, இதன்போது புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அது தற்போது குழந்தைகளை பாதிப்புக்குட்படுத்தப்படும் பரீட்சையாக மாறியுள்ளமை தொடர்பில் மிக நீண்ட நேரமாக பேசப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் நோக்கிலும், அனைத்து வசதிகளையும் கொண்ட மத்திய மகாவித்தியாலயத்தில் சேர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டபோதும், தற்போது  அந்நோக்கங்களிலிருந்து விடுபட்டு, சுமார் 120 பிரபலமான தேசிய பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் மிகப் பாரிய சித்திரவதைக்குரிய பரீட்சையாக அது மாறியுள்ளமை தொடர்பில் அக்குழு மேற்கொண்ட ஆய்வில் புலனாகியுள்ளது.

அதுமாத்திரமன்றி உதவி வகுப்புகள் ஊடாக சிறுபிள்ளைகள் மேலும் உளரீதியாக பாதிப்படைகின்றமையும், சமநிலையான மனிதனாக அவர்களை சமூகத்தில் இணைக்கும் பணியில், இந்த போட்டி பரீட்சையானது  மிகப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புலமைப்பரிசில் தொடர்பில் அரசாங்கம் வருடாந்தம் செலவிடுகின்ற பணம் சுமார் ரூபா ஒரு கோடி 35 இலட்சங்களாகும். ஆயினும் புலமைப்பரிசில் பரீட்சையை நடாத்துவதற்கு மாத்திரம் செலவிடப்படும் தொகை ரூபா இரண்டு கோடிக்கும் அதிகமாகும்.

இவ்வாறான நிலைமைகளின் கீழ் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில், தீர்மானம்மிக்க பல முடிவுகளை எதிர்வரும் காலங்களில் எடுக்கவுள்ளதோடு  அறிஞர்களைக் கொண்ட குழுவின் சிபாரிசுகளுக்கமைய, முதலாவது தீர்மானமாக அனைத்து மாணவர்களும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவது கட்டாயமென அறிவிக்கப்பட்ட சுற்றுநிருபத்தை இரத்து செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் நிதி உதவியை எதிர்பார்க்காத மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை மூலம் பிரபலமான பாடசாலைகளை எதிர்பார்க்காத மாணவர்கள்கூட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையானது, புலமைப் பரிசில் பரீட்சையின் போட்டித்தன்மை மேலும் அதிகரித்துள்ளதோடு, குழந்தைகள் மீது சுமத்தப்படும்  தேவையற்ற சுமை அதிகரித்துள்ளமையே இதற்கான முதற் காரணமாகும். அதற்கமைய எதிர்வரும் காலங்களில் விருப்பத்தின் அடிப்படையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதா அல்லது தோற்றாமல் இருப்பது எனும் முடிவெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது.

அந்த வகையில், புலமைப்பரிசில் பரீட்சையை கட்டாயமாக்கி வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்வதோடு, புலமைப்பரிசில் பரீட்சையின் கட்டமைப்பு, அது நடாத்தப்பட வேண்டிய தரம், நடாத்தப்படும் நோக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குழு தனது கவனத்தை செலுத்தியுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் இது தொடர்பிலான மேலும் பல சிபாரிசுகளை அக்குழு கல்வி அமைச்சரிடம் முன்வைக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top