அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து
பிக்குவின் அடாவடித்தனத்தைக் கண்டித்து
கண்டணப் போராட்டம்

மட்டக்களப்பு, செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மட்டக்களப்பு நிர்வாக உத்தியோகஸ்தர்களால் ஆர்ப்பாட்டமொன்று, இன்று (25) முன்னெடுக்கப்பட்டது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் மரம் ஒன்றை நேற்று முன்தினம் வெட்டுவது தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், கடமையில் ஈடுபட்டிருந்த ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.

விகாராதிபதியின் செயலை கண்டித்து, இலங்கை அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்க மட்டக்களப்பு மாவட்ட கிளை, ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம் என்பன இணைந்தே, இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

விகாராதிபதியின் செயற்பாட்டுக்கு, நல்லாட்சி அரசாங்கம் துணை போகின்றதுஎன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.

அரச உத்தியோகஸ்தர்கள், மட்டக்களப்பில் சுதந்திரமாகக் கடமையாற்றுவதற்கு வழிசமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள, ஆர்ப்பாட்டக்காரர்கள், அந்த விகாராதிபதிக்கு எதிராக, நல்லாட்சி அரசாங்கமும், சட்டம், ஒழுங்கு அமைச்சும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், ஊர்வலகமாகச் சென்றவர்கள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

மகஜரைப் பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார், குறித்த சம்பவம் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் இரண்டு வெளியாரால் பூட்டுகள் போடப்பட்டு பூட்டப்பட்டுள்ளமை தொடர்பிலும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவை தொடர்பிலும்  விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top