மட்டக்களப்பு, பலாலியில் இருந்து
தென்னிந்தியாவுக்கு விமான சேவை
உதவி அளிப்பதாக இந்தியா உறுதி

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும், பலாலி மற்றும், மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு நேரடி விமான சேவைகளை நடத்துவதற்கும், உதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்த போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் சந்தித்துப் பேச்சு நடத்திய போது, பாதுகாப்பு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
இதன்போது, இலங்கைக்கு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு இந்தியா விரும்புவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
அத்துடன் ரோந்து நடவடிக்கைகளைப் பலப்படுத்தும் வகையில், இலங்கை காவல்துறைக்கு 750 ஜீப் வாகனங்களை வழங்க இந்தியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு உதவி வழங்க இணக்கம் தெரிவித்த ராஜ்நாத் சிங், தென்னிந்தியாவில் இருந்து பலாலி மற்றும் மட்டக்களப்புக்கும் கூட நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க இந்தியா உதவும் என்றும் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் குற்றங்களைக் குறைப்பதற்கு இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார்.
இதன் விளைவாக, இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top