பிரதேச செயலாளரை

தாக்க முற்பட்ட சம்பவம்
விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு
சிறிநேசன் எம்.பி பணிப்புரை


மட்டக்களப்பு - செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சென்றுள்ளார். இதன்போது அவர் பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளருடன் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் விடயம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இந்த விடயம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மயிலம்பாவெளி பிரதான வீதியில் உள்ள மீள்குடியேற்ற காணியில் இருந்த அரச மரம் ஒன்றின் கிளைகளை வெட்டுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர், பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தாக்கவும் முற்பட்டுள்ளார்.

எனினும் தாக்குதல் முயற்சியை அவ்விடத்தில் நின்ற பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்த போதும் குறித்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் மட்டக்களப்பில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், இன்றைய தினம் சிறிநேசன் எம்.பியால் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காவிடின் பாரிய இனமுறுகலுக்கு இந்த சம்பவம் வித்திட்டிருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், வியாளேந்தின் மற்றம் யோகேஸ்வரன் ஆகியோரால் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பலனாக நாளைய தினம் குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரால் உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top