சபரிமலை விவகாரத்தில் சிக்கிய
ரெஹானா பாத்திமா பணி இடமாற்றம்

அவர் பணியாற்றும் நிறுவனம்
 அதிரடி நடவடிக்கை

சபரிமலை ஐயப்பயன் கோயிலுக்கு நுழைய முயன்று பரபரப்பு ஏற்படுத்திய பெண்ணியவாதியும், சமூக செயற்பாட்டாளருமான ரெஹானா பாத்திமாவை பணிடமாற்றம் செய்து பிஎஸ்என்எல் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த மாதம் 28-ம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. , ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கும்போது பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது.

ஆனால், தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், கோயில் தந்திரிகள், இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் கவிதாவும், பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா என்பவரும் சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் வந்தனர். ஆனால், பக்தர்கள், தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர்களைக் கீழே இறக்கக் கேரள அரசு உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள ரெஹானா பாத்திமாவின் வீட்டை சமூக செயற்பாட்டாளர்கள் தாக்கி சேதப்படுத்தினார்கள். இந்தச் சூழலில், ரெஹானா பாத்திமாவை பணிடமாற்றம் செய்து பிஎஸ்என்எல் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ரெஹானா பாத்திமா பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கொச்சியில் உள்ள போட் ரெட்டி கிளையில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வந்தார்.

சபரிமலை விவகாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதைத் தொடர்ந்து அவரை பழரவிட்டம் நகரில் உள்ள கிளைக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பழரவிட்டோம் கிளையில் இருந்து ரெஹானா பாத்திமாவை வெளியேற்ற வேண்டும் எனக் கோரி நேற்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

முன்னதாக, சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா சபரிமலையின் மாண்பையும், இந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தில் இருந்து கேரள முஸ்லிம் ஜமாத் நீக்கி அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top