ஆலயம் தொடர்பாகநீதிமன்றில் தொடுத்த
வழக்கை வாபஸ் பெறவேண்டும்!
ஆளும் கட்சியின் தமிழ் பெண் உறுப்பினர்கள்
கல்முனை மாநகரசபை மேயரிடம் மகஜர் கையளிப்பு!!

கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக வளாகத்திலுள்ள பிள்ளையார் ஆலயம் தொடர்பாக கல்முனை நீதிமன்றில் தொடுத்த வழக்கை வாபஸ் பெறவேண்டும் என கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி .எம்.றக்கீப்பிடம் மாநகரசபையின் ஆளும் கட்சியின் தமிழ் பெண் உறுப்பினர்கள் இருவர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அனஸ்ரி றாகல் செலஸ்ரினா, வி.புவனேஸ்வரி, ஆகிய இரண்டு தமிழ் பெண் உறுப்பினர்களே இவ்விதம் கோரிக்கை விடுத்து மகஜரைக் கையளித்துள்ளனர்.
இவர்களின் இந்த மகஜரின் பிரதிகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்களுக்கும் இவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக ஆலய கட்டடம் இடிக்கப்பட வேண்டும் என கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இப் பெண் உறுப்பினர்கள் தமது இனம் சார்ந்து இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அவர்கள் இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

நாம் முஸ்லிம் காங்கிரஸ்வுடன் இணைந்து ஆட்சியமைத்துச் செயற்பட்டு வருகின்றோம். இந்நிலையில் ஆலய பிரச்சினை நீதிமன்றுக்கு சென்றுள்ளது.

இது கல்முனையில் நல்லுறவுடன் வாழ்ந்து வந்த இரு இனங்களையும் மோதவைக்கின்ற ஒருசெயலாக பார்க்கின்றோம். மேலும் ஒரு இனக்கலவரத்தைத் தோற்றுவிப்பதற்கும் ஏதுவாக அமையலாம்.

நாம் அரசியல் ரீதியாக இணைந்து செயற்பட்ட போதிலும் இனம், சமயம் என்று வருகின்ற போது நாம் எமது இனத்தை சமயத்தைத்தான் பார்ப்போம் அதில் தவறுமில்லை. எமது மொழி, எமது இனம், எமது சமயத்திற்குத்தான் நாம் முன்னுரிமை வழங்குவோம்.

அதற்காக இது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிரானது அல்ல, எமது மேயர் இதனை நீதிமன்றுக்குக் கொண்டு செல்லுமுன்னர் எம்முடன் பேசியிருந்தால் அதனை கலந்து பேசி சுமுகமாக தீர்த்திருக்கலாம். எனினும் இன்னும் காலம் கரைந்து விடவில்லை.

எதிர்வரும் 30ஆம் திகதி கல்முனை நீதிமன்றில் வழக்கு தவணை உள்ளது. அதற்கு முன்பாக அதனை வாபஸ் பெறுமாறு கேட்டிருக்கிறோம்.

அதனூடாக இரு இனங்களும் சமாதானத்துடன் வாழும் சூழலை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். மேயர் மீதும் மாநகரசபை மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கட்டியெழுப்பப்படும். அதற்கான மகஜரையும் மேயரிடம் சமர்ப்பித்திருக்கிறோம். இவ்வாறு மகஜர் வழங்கிய பெண் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top