மோடியுடன் தொலைபேசியில் பேச்சு
– விளக்கமளித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதியை படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் இந்தியப் புலனாய்வு அமைப்பான றோ தொடர்புபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து- நேற்றுமாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டு, பேசியுள்ளார்.
தன்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தின் பின்னணியில், இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ இருந்தது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் நடந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியதாக நேற்று வெளியாகிய ஊடகச் செய்திகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அரசாங்கத் தரப்பில் இருந்து அடுத்தடுத்து மறுப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார் ஜனாதிபதி.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நேற்று பிற்பகல் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது இரு நாட்டு தலைவர்களும் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தற்போது இலங்கையில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
இலங்கையின் சுபீட்சத்திற்கும் அபிவிருத்திக்கும் தேவையான அனைத்துவித உதவிகளையும் வழங்குவதாக இந்திய பிரதமர் தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு தொடர்ந்தும் வலுவுடன் இருக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அயல்நாடுகளுடனும் ஏனைய உலக நாடுகளுடனும் நட்புறவையும் நெருக்கமான தொடர்புகளையும் பேணிப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்தார்.
நெருங்கிய நண்பனாகவும் அயல்நாடு என்ற வகையிலும் இலங்கையின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் இந்தியாவிடமிருந்து கிடைக்கப் பெறும் ஒத்துழைப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டினார்” என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதியின் தொலைபேசிய அழைப்புத் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செயலகம் நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “ இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசினார்.
தம்மையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையும் படுகொலை செய்வதற்கான ஒரு சதித்திட்டத்தில், எந்தவொரு விதத்திலும் இந்தியாவின் ஈடுபாடு குறித்து தான் கூறியதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை, அவர் திட்டவட்டமாக நிராகரித்தார்.
விசமத்தனமான, தீய நோக்குடைய இந்த அறிக்கைகள் அடிப்படையற்றவை, பொய்யானவை என்று அவர் குறிப்பிட்டதுடன், இது இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே தவறான புரிந்துணர்வை உருவாக்கவும், இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை சேதப்படுத்தும் நோக்கம் கொண்டவை என்று தோன்றுவதாகவும் தெரிவித்தார்.
இந்த அறிக்கைகைள் பொதுவெளியில் மறுப்பதற்கு தனிப்பட்ட முறையில் தாமும், அரசாங்கமும் எடுத்த நடவடிக்கைகளை இந்தியப் பிரதமரிடம், ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.
இந்தச் சூழலில் நேற்றுக்காலை தாம் இந்தியத் தூதுவரைச் சந்தித்ததையும் அவர் நினைவுபடுத்தினார்.
இந்தியப் பிரதமரை இலங்கையின் உண்மையான நண்பனாக கருதுவதாகவும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர் என்றும் ஜனாதிபதி கூறினார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்களை பெரிதும் மதிப்பதாகவும், இந்திய பிரதமருடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தி அவருடன் இணைந்து செயற்படுவதில் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, தீங்கிழைக்கும் நோக்குடைய ஊடக அறிக்கைகளை பகிரங்கமாக தெளிவுபடுத்தி மறுப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த உடனடி நடவடிக்கைகளை இந்தியப் பிரதமர் பாராட்டினார்.
முதலில் அயலவர் என்ற இந்தியாவின் கொள்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இந்திய பிரதமர், இந்திய அரசாங்கமும், தனிப்பட்ட முறையில் தாமும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.


0 comments:
Post a Comment