உடல் துண்டாக்கப்பட்டு சவூதி நபர்களால்
காரில் எடுத்துச் செல்லப்பட்டதா?
- பத்திரிகையாளர் ஜமால் கொலையில் புதிய தகவல்கள்
துருக்கியில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்டதாக கூறப்படும் பத்திரிகையாளர் ஜமால் உடல்கள் துண்டிக்கப்பட்டு பல கார்களில் எடுத்துச் செல்லப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜமால் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவூதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முஹம்மது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தார்.
துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த வாரம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.
இவ்வழக்கு தொடர்பாக, சவூதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவூதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.
சவூதி பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் நாளுக்கு நாள் பல அதிர்ச்சியான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சவூதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமால், விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம்சாட்டியது.
இதைத்தொடர்ந்து மேலும் ஒரு வீடியோவை துருக்கி வெளியிட்டது. அதில், ‘‘ஜமாலை கொலை செய்வதற்காக சவூதியில் இருந்து 15 பேர் கொண்ட கூலிப்படை ஒன்று துருக்கி வந்துள்ளது. இஸ்தான்புல்லிலுள்ள
சவூதி தூதரகத்துக்கு ஜமால் சென்றநாளில் குறிப்பிட்ட இடைவெளியில் அவர்கள் தூதரகத்துக்குள் செல்கின்றனர். அவர்களில் ஜமால் போன்ற உருவ அமைப்பு உடைய நபர் ஒருவரும் உள்ளே செல்கிறார். சிறிது நேரத்துக்கு பிறகு ஜமால் அணிந்து சென்ற ஆடையை அவரது உருவத்தை ஒத்த நபர் அணிந்தபடி வெளியே வருகிறார். மேலும் அவர் ஜமாலைப் போன்ற தோற்றம் பெற போலியான தாடியை தனது முகத்தில் பொருத்தி இருக்கிறார்.
ஜமாலின் ஆடை அணிந்து வருபவரின் பெயர் முஸ்தபா அல் மதானி. அவர் சவூதி அனுப்பிய கூலிப்படைகளில் ஒருவர்’’ என்று துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதே வீடியோவை சுட்டிக்காட்டி அமெரிக்க ஊடகங்கள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளன. அந்த வீடியோவில் சவூதி தூதரக பகுதியில் இருந்து அடுத்தடுத்த கார்கள் வேகமாக வெளியே கிளம்பிச் செல்கின்றன. முஸ்தபா அல் மதானி வெளியேறும் அதே வேளையில் இந்த கார்களும் வேகமாக செல்கின்றன. இந்த கார்களில் கொல்லப்பட்ட ஜமாலின் உடல் பாகங்கள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே சவூதி வெளியுறவு அமைச்சர் அடேல் அல் ஜூபைர் இதுகுறித்து கூறுகையில் ‘‘ஜமால் மரணம் தொடர்பாக சவூதி அரேபியா விரிவான விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் உண்மை முழுமையாக வெளியே வரும் என நம்புகிறோம். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது. இதற்கு நாங்கள் உறுதி கூறுகிறோம்’’ எனக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment