சண்டியனாக மாறும் பிக்குவால் ஆபத்து
மத குருவாக அன்றி இராணுவ தளபதி போன்று
இவர் செயல்படுகின்றார்
அரியநேத்திரன் தெரிவிப்பு



அடாவடித்தனத்திலும் அச்சுறுத்தலிலும் இராணுவ தளபதி போன்று செயல்படும் மட்டக்களப்பு மங்களராமை விகரையின் விகராதிபதி அம்பிட்டிய சுமணரெட்ண தேரர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதுடன் அவர் மட்டக்களப்பு விகாரையை விட்டு வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மயிலம்பாவெளியில் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தை அச்சுறுத்தி அடாவடி செய்த புத்த துறவி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மயிலம்பாவெளியில் புத்த துறவியின் காட்டு மிராண்டித்தன செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த புத்த துறவி பௌத்த மதத்திற்கு அவமானச்சின்னம் காவி உடைதரித்த இராணுவ கட்டளை அதிகாரி போன்றே இவரின் நடத்தை உள்ளது.

சம்மந்தப்பட்ட சுமணரெட்ண தேரர் மட்டக்களப்பில் இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்துவதும் தெருச்சண்டியன் போன்று செயல்படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினத்தை பட்டிப்பளை பிரதேச்செயலகத்தில் அத்துமீறி பிரவேசித்து அடாவடித்தனத்தை மேற்கொண்டதுடன், கெவிளியாமடுவில் கிராமசேவை உத்தியோகத்தரை மிகவும் கீழ்தரமாகவும் ஒட்டுமொத்த தமிழ்மக்களை புண்படும் படுயாமவும் தகாத வார்தைகளால் ஏசினார்

இவரை சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இடமாற்ற வேண்டும் என அப்போது நாம் தெரிவித்தோம் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒரு மத குருவாக அன்றி இராணுவ தளபதி போன்று இவர் செயல்படுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

நல்லாட்சி அரசு என்று பெயரளவில் கூறிக்கொண்டு நரியாட்சி போன்று இவ்வாறான புத்த பிக்குகள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகளையும் அலுவலர்களையும் விரட்டி தாம் நினைத்ததை சாதித்து வரும் இவ்வாறான புத்த துறவிகளால் அரசுக்கு மட்டுமல்ல பௌத்த மதத்திற்கும் ஒரு அவமானமாகவே கருதமுடியும்.

நேற்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் இன்று செங்கலடி பிரதேச செயலாளர் நாளை எந்த பிரதேச்செயலாளருக்கும் இந்த சுமண ரெட்ண தேரரலால் எதுவும் நடக்காது என்ற உத்தரவாதம் இல்லை.

கண்கெட்ட முன்னே சூரிய நமஷ்காரம் செய்வதை போன்று இல்லாமல் உடனடியாக மயிலம்பாவெளியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவும் கடந்த காலம் இவரின் செயல்பாடுகள் தொடர்பாகவும் சரியான நீதி வழங்கப்படவேண்டடும் இந்த விடயத்தை நீதிமன்றில் விசாரனை செய்து தண்டிக்கப்படுவதுடன் மேன்மை தங்கிய ஜனாதிபதி தலையிட்டு சம்பந்தப்பட்ட பௌத்த மத பீடாதிபதிகளின் கவனத்துக்கும் இத்த புத்த துறவியின் செயல்பாட்டை எடுத்து கூறி உடனடியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இவரை இடமாற்றம் செய்ய வேண்டும்.

அப்படி செய்யாமல் விட்டால் எதிர்காலத்தில் தமிழ்மக்கள் மத்தியில் இந்த புத்த துறவியால் ஒரு இனக்கலவரம் ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை எனவும் தமிழரசு கட்சி தலைவர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top