மர்ஹூம் டாக்டர் ஏ.எல்.எம்.ஜெமீல்
(பத்து வருடங்களுக்கு முன் (24.10.2008 இல்)இறையடி சேர்ந்த
மர்ஹூம் டாக்டர் ஏ.எல்.எம் ஜெமீல் அவர்களை
நினைவு கூர்ந்து இவ் ஆக்கம் வரையப்படுகின்றது)
மர்ஹூம்
டாக்டர் ஏ.எல்.எம்.ஜெமீல் அவர்களின்
பல் வேறுபட்ட
குணாதிசயங்களையும் நற்பண்புகளையும் எதிர்காலச்
சந்ததியினர் குறிப்பாக சமூகத்தை வழிநடாத்த முன்வருபவர்கள்
அறிந்து கொள்வது
அவசியமாகும். அவர் தனது நாற்பது தசாப்த
சமூக மற்றும்
வைத்திய சேவையின்போது
கடைப்பிடித்த மிக முக்கிய பண்பாக நான்
அவதானித்தது "உயர்வில் எளிமையும்
துன்பத்தில் பொறுமையுமாகும்."
1965ம் ஆண்டு இலங்கையின் கிழக்கு
மாகாணத்தில் முதலாவது முஸ்லிம் MBBS வைத்தியக் கலாநிதியாக
வெளியேறிய Dr.ஜெமீல் அவர்கள் பின்னர் 1994இல்
முழுக் கிழக்கு
மாகாணத்தினதும் முதலாவது FRCOG ஆகக் கௌரவிக்கப்பட்டார்.
1966இல் கல்முனை வைத்திய சாலையில்
தனது அரச
சேவையை ஆரம்பித்து1967இல் அரச
சேவையிலிருந்து விலகி கல்முனைக்குடியில் தனது பிரத்தியேக
வைத்திய சேவையைத்
தொடங்கி நடாத்தினார்.1975-78
காலப்பகுதியில் மேற்படிப்பிற்காக லண்டன் சென்று MRCOG பட்டம்
பெற்றார்.
MRCOGஆக பட்டம் பெற்று வந்த
இவருக்கு கொழும்பு
அல்லது மாகாண
பொது வைத்திய
சாலைகளில் மகப்பேற்று
வைத்திய நிபுணராகக்
கடமையாற்றி தேசிய ரீதியில் புகழ் பூத்த
வைத்திய நிபுணராகத்
திகழக் கூடிய
சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. ஆயினும் தனது
பிரதேசம், தனது
சமூகம் என்பவற்றுடன்
அபாரித பற்றுக்கொண்டிருந்த
இவருக்கு கொழும்பு
வாழ்க்கையோ கூடிய வருமானமோ பெரிதாகத் தெரியவில்லை.
அவர் மீண்டும்
கல்முனை வந்து
தனது சேவையை
விஸ்தரித்து "Central Nursing
&Maternity Home" எனும் பெயரில் வைத்திய
சாலை ஒன்றை
ஆரம்பித்தார். இவ்வைத்திய சாலை மாவட்டம் முழுவதும்
பிரசித்திபெற்று மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வந்தது.
இப்
பகுதியில் ஏற்பட்ட
பயங்கரவாத கலவரம்
ஒன்றின்போது இவ்வைத்திய சாலை இப்பிரதேச மக்களுக்கு
ஆற்றிய சேவை
மறக்கமுடியாதது. இவ்வைத்தியசாலை தற்போது அவரின் ஞாபகார்த்த
வைத்திய சாலையாக
பெயர் மாற்றப்பட்டு
இயங்குவது மகிழ்வுக்குரியது.
பரந்த
அறிவாற்றல் கொண்ட கல்விமானான Dr.ஜெமீல் அவர்கள்
மதிநுட்பம் மிக்க வைத்தியராகத் திகழ்ந்தார். நான்கு
தசாப்தங்கள் இவர் ஆற்றிய வைத்திய சேவையில்
பயன் பெற்றவர்களும்
சமூக சேவைகளில்
அவருடன் ஒத்துழைத்தவர்களும்
அவரின் அர்ப்பணிப்பு,
திறமை, தியாகம்
என்பனவற்றிற்கு சாட்சியாகவுள்ளனர். அத்துடன்
இப்பகுதியில் சேவையாற்றிய பல வைத்தியர்களுக்கும், வைத்திய நிலையங்களுக்கும் அவர் மறக்கமுடியாத
ஒரு நிழல்
மரமாக விளங்கினார்.வைத்தியர்களுக்கான கருத்தரங்குகள், வைத்திய முகாம்கள் என்பனவற்றிற்கும்,
கல்முனை வைத்திய
சங்கத்தின் தோற்றத்திற்கும், A.M.H.இன்
வளர்ச்சிக்கும் உறுதுணையாகவிருந்தார்.
1993ம் ஆண்டு நான் கல்முனை
வைத்திய சங்கத்தின்
செயலாளராக விடுத்த
வேண்டுகோளுக்கிணங்க இலங்கை வைத்திய
சங்கத்தின் அக்காலத் தலைவர் பேராசிரியர் வில்பிரட்
பெரேரா அவர்களின்
தலமையில் கல்முனை
மஹ்மூத் மகளிர்
கல்லூரியில் ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த
வைத்திய மகாநாடும்
விஷேட வைத்திய
முகாமும் நடைபெற்றது.
இதில் கொழும்பில்
இருந்து மிகப்
பிரபல்யமான வைத்திய நிபுணர்கள் 30க்கு மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.இவர்களுக்கான விசேட
விமானப்போக்குவரத்தை முன்னாள் அமைச்சர்
மர்ஹூம் A.R.மன்சூர் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில்
பேராசிரியர் வில்பிரட் பெரேராவுக்கு Dr.ஜெமீல் அவர்களை
அறிமுகம் செய்யப்பட்டபோது
மிக அனுபவமிக்க
ஒரு மகப்பேற்று
மருத்துவ நிபுணர்
இப்பிரதேசத்தில் இலைமறை காயாக இருப்பதைக் கண்டு
ஆச்சரியப்பட்டார். உடனே Dr.ஜெமீலை
FRCOGஆகக் கௌரவிப்பதற்கும்
ஏற்பாடுசெய்தார்.
மர்ஹூம்
டாக்டர் A.L.M. ஜெமீல் அவர்கள் தன்னிடம் சிகிச்சைக்காக
வருபவர்களுடனும் மற்றும் பலருடனும் மிக அன்யோன்யமாகப்
பழகியதுடன் அவர்களின் பிள்ளைகளின் படிப்பு, தொழில்,
குடும்பப்பிரச்சினைகள், திருமண ஏற்பாடு
போன்ற சகல
நலன்களிலும் அக்கறை காட்டினார்.
அதேபோன்று
பிரதேசத்தின் அபிவிருத்தி, பாதுகாப்பு,இன,பிரதேச
ஒற்றுமை போன்ற
விடயங்களிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தார். எதையும்
வெளிப்படையாகப் பேசுபவராகவும் கண்டிக்கப்பட
வேண்டியதைக் கண்டித்தும் புகழப்பட வேண்டியதை புகழ்பவராகவும்
விளங்கினார்.
1987இல் கிழக்கு மாகாண முஸ்லிம்களின்
அரசியலில் தேக்கம்
காணப்பட்டபோது கிழக்கு மாகாணத்தின் சகல பிரதேசங்களிலுமிருந்தும்
பிரதிநிதிகளை வரவழைத்து பாரிய மகாநாடு ஒன்றை
நிந்தவூரில் ஏற்பாடு செய்து "கிழக்கு மாகாண
முஸ்லிம் பேரவை"
உருவாக வழிவகுத்தார்.
மர்ஹும்
Dr. A.L.M.ஜெமீல் அவர்களின் அனைத்துச் சேவைகளுக்கும் மகுடம்
வைத்தால் போல்
அமைந்தது அவரது
அயராத முயற்சியால்
உருவான கல்முனை
அல்ஹாமியா அரபுக்கல்லூரியாகும்.
இக்கல்லூரியிலிருந்து
வெளியாகும் உலமாக்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களை மட்டும்
போதிப்பவர்களாக அல்லாது இப்பிரதேசத்தில் நற்பண்புகளையும் மேலோங்கச்
செய்ய வேண்டும்
என்பதே அவரின்
அவா.
"பெரியாரை மதிக்கும் சமூகத்திலேயே பெரியார்கள்
உருவாகுவார்கள்" என்ற அறிஞர்
சித்திலெப்பை அவர்களின் கூற்றுக்கிணங்க அனைவரும் வாழ
முயற்சிப்போமாக.
எல்லாம்
வல்ல அல்லாஹ்
அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸின் சகல பாக்கியங்களையும்
வழங்குவானாக!
Dr.M.I..M.ஜெமீல்
சாய்ந்தமருது
0 comments:
Post a Comment