தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை
ஆக்கிரமித்துள்ள மாணவர்களை  வெளியேற்றுமாறு,
நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ள போதிலும்,
அவர்களை அங்கிருந்து அகற்றாமல்
பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுவதைக்
கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்




தென்கிழக்குப் பல்கலைக்கழக பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களை  வெளியேற்றுமாறு நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டி, பொலிஸாரின் செயற்பாட்டுக்கு எதிராக  கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று, பல்கலைக்கழக ஒலுவில் வளாகப் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், இன்று 22 ஆம் திகதி திங்கள்கிழமை இடம்பெற்றது.

இப்போராட்டத்தை, பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து முன்னெடுத்தனர்.

பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள், பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இயங்கிவரும் நிர்வாகப் பிரிவுக் கட்டடத்தினுள் நுழைந்து, கடமைகளைச் செய்யவிடாமல் இருந்து வருகின்றனர் எனக் குற்றஞ்சாட்டும் பல்கலைக்கழகப் பணியாளர்கள், இதனால் பல்கலைக்கழக நடவடிக்கைகளை கொண்டுசெல்ல முடியாத நிலைமை தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இம்மாணவர்களுக்கெதிராக, பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தும் பொலிஸார், அசமந்தப் போக்குடன் செயற்படுகின்றனர் எனவும், அதைக் கண்டித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதெனவும், தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கத் தலைவர் எம்.எம். நௌபர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்களை, நிர்வாகக் கட்டடத்திலிருந்து வெளியேற்றுமாறு, நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அம்மாணவர்களை அங்கிருந்து அகற்றாமல் பொலிஸார் உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த சில மாணவர்கள், பல்கலைக்கழகத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளுமாறு கோரியே, கடந்த ஒரு வார காலமாக, பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து, தமது போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதியை, கடந்த ஒரு வார காலமாக ஆக்கிரமித்துள்ள மாணவர்களுக்கு எதிராகப் பல்வேறுபட்ட சட்ட நடவடிக்கைகள், பல்கலைக்கழக நிர்வாகத்தால் எடுக்கப்பட்டன.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top