துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால்
குடும்பத்தாருடன் சவூதி மன்னர் சந்திப்பு

   
துருக்கியில் உள்ள வூதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் மகன் சலா கஷோக்கி மற்றும் சகோதரர் சஹேல் ஆகியோரை நேற்று அரண்மனைக்கு வரவழைத்த சவூதி மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஆகியோர்  அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்..

சவூதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி(59) என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவூதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபியா நாட்டு தூதரகத்துக்கு கடந்த இரண்டாம் திகதி சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது

அவர் அந்த தூதரகத்துக்குள் சவூதி அரேபியாவை சேர்ந்த கூலிப்படையினரால் கொல்லப்பட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவூதி அரேபியா மறுத்து வந்தது.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவூதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

உலக நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வருவதால் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவூதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி பொலிஸ் அதிகாரிகள் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சவூதி அரேபியாவை சேர்ந்த 18 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த படுகொலை தொடர்பாக ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு சவூதி தூதரகத்தில் பணியாற்றும் 26 பேருக்கு இஸ்தான்புல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது

சவூதி மன்னரை விமர்சித்து எழுதிய அவரது கை விரல்களை வெட்டி, துண்டித்த பின்னர் கூலிப்படையினர் அவரை தீர்த்துக் கட்டியதாக தற்போது தெரியவந்துள்ளது. இஸ்தான்புல் புறநகர் பகுதியில் உள்ள காடுகளில் கஷோக்கியின் உடலை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி தூதரகத்துக்குள் ஜமால் கஷோக்கி நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், சவூதி மன்னர் சல்மான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவருக்கு துணையாக செல்லும் மஹெர் அப்துலஜிஸ் முட்ரெக் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு மராவில் பதிவாகியுள்ளது.

மேலும், லண்டன் நகரில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் கடந்த 2007-ம் ஆண்டில் மஹெர் அப்துலஜிஸ் முட்ரெக் தூதரின் முதன்மை செயலாளராக பணியாற்றிய விபரமும் கிடைத்துள்ளது.
    

இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் மகன் சலா கஷோக்கி மற்றும் சகோதரர் சஹேல் ஆகியோரை நேற்று அரண்மனைக்கு வரவழைத்த சவூதி மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஆகியோர்  அவர்களுக்கு ஆறுதல் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதற்கிடையே, ஜமால் கஷோக்கியின் கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என சவூதி அரசு நேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top