இம்முறை தேர்தலில் 'கார்ட்போட்'
வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படும்

எதிர்வரும் 8ஆவது ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பதற்கு குறைந்த செலவில் 12,500 கார்ட்போட் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
                                                                       
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில், மரப்பெட்டியிலான வாக்குப்பெட்டிகளை தயாரிப்பதற்கு 100 மில்லியன் ரூபா செலவாகின்ற அதேவேளை கார்ட்போட் வாக்குப் பெட்டிகளை தயாரிப்பதற்கு 10 மில்லியன் ரூபா மாத்திரமே செலவு செய்ய முடிந்துள்ளது. அதில் 90 மில்லியன் ரூபாவை மீதப்படுத்த முடிந்துள்ளது. பெட்டிகள் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளன என்பதை பரிசீலித்த பின்னரே இதனைத் தெரிவு செய்தோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மூன்று வகையான வாக்குப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறைந்த வாக்குகளை கொண்ட வாக்களிப்பு நிலையத்துக்கு சிறிய பெட்டி, மத்திய தரத்துக்கு சாதாரண பெட்டி மற்றும் ஆகக்கூடிய வாக்குகளைக் கொண்ட வாக்களிப்பு நிலையத்துக்கு பெரிய பெட்டியும் பயன்படுத்தப்படவுள்ளது.

மொத்தமாக 12,845 வாக்களிப்பு நிலையங்கள். காணப்படும் நிலையில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்துக்கும் ஒரு வாக்குப் பெட்டி வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெட்டிகள் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மரப்பெட்டிகளை அமைக்க கூடுதலான பணம் செலவிட வேண்டியுள்ளதால் நாம் கார்ட்போட் பெட்டிகளைப் பயன்படுத்த திட்டமிட்டோம் என்று இதன்போது அவர் தெரிவித்தார்.

மரப்பெட்டிகளை செய்வதாக இருந்தால் 100 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. கார்ட்போட் வாக்குப் பெட்டிகளால் எந்த தவறுகளும் ஏற்படப்போவதில்லை. வாக்கு மோசடிகளுக்கும் இடமில்லை. வாக்குப் பெட்டிகள் கைமாறக்கூடிய வாய்ப்புகளும் கிடையாது. எனவே மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஒரு கோடியே 59 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு போதிய கால அவகாசம் தேவையென்பதை உணர்ந்து இத் தேர்தலில் சில மாற்று நடவடிக்கைகளை கையாளத் தீர்மானித்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top