தேர்தல் மேடைகள் மிக நாகரீகமாக
அமைய வேண்டும் என கோரிக்கை

தேர்தல் மேடைகள் மிக நாகரீகமாக அமைய வேண்டும் என காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
                                                                                  
இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

கடந்த வெள்ளிக்கிழமை (2019.11.01) சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார மேடையில் உரையாற்றிய சியாத் ஆசிரியர் காத்தான்குடியையும், காத்தான்குடி மக்களையும் மிகக்கேவலமான வார்த்தைகளால் விமர்சித்ததை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தல் மேடையில் என்பது மற்றவர்களது மானத்தை பாதுகாப்பதாகவும் ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியாகவும் அமைய வேண்டுமே தவிர, ஒரே சமூகத்திற்குள் இருக்கும் ஏனையவர்களையோ அல்லது அவர்களது ஊர்களையோ கேவலப்படுத்துவதாக அமையக்கூடாது.

ஒரு சில பிழையான விடயங்களுக்காக ஒட்டுமொத்த ஊரையும், அங்கு வாழும் மக்களையும் பொது வெளியில் பிழையாக விமர்சிப்பது படித்தவர்களின் பண்பல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பொறுப்பு வாய்ந்த உலமாக்கள் புத்திஜீவிகள் நிறைந்த சாய்ந்தமருது பிரதேசத்தில் இவ்வாறான வேதனைக்குரிய உரை நிகழ்த்தப்பட்டிருப்பது எமது சமூகத்திற்கு எதிர்காலத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக முன்னின்று குரல் கொடுப்பதிலும் உதவி செய்வதிலும் காத்தான்குடி மக்கள் ஒரு போதும் தயங்கியதில்லை என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இன்று சர்வதேசரீதியில் காத்தான்குடியானது முன்மாதிரியாக பேசப்படக்கூடிய ஊராக இருப்பதற்கு காத்தான்குடி மக்களின் அர்ப்பணிப்பான பல சேவைகளே காரணம் என்பதை அனைவரும் அறிவர்.

எனவே, தேர்தல் காலங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்ற அரசியல்வாதிகள், பிரச்சாரகர்கள் அனைவரும் பொறுப்புணர்வோடும் நிதானத்தோடும் நடந்து கொள்ள வேண்டுமென காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அனைவரையும் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top