அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு
முக்கியஸ்தர்கள் பிரதமர் ரணிலுடனான சந்திப்பு
அம்பாறை மாவட்டத்தில் மூன்று தமிழ்ப்பிரதேச செயலகங்கள்
கல்முனை வடக்கு பிரதேச செயலகம்
பொத்துவில் பிரதேசத்துக்குட்பட்ட கோமாரி தனிப்பிரதேச செயலகம்
சம்மாந்துறைப் பிரதேசத்திற்குட்பட்ட மல்வத்தை
தனிப்பிரதேச செயலகம்
அம்பாறை கரையோர தமிழ்ப் பிரதேச வைத்தியசாலைகள்
அம்பாறை சுகாதாரப் பிரிவுடன் இணைத்தல்
அல்லது தனியான பிரிவை ஏற்படுத்தல்
அம்பாறை மாவட்டத்தில் மூன்று தமிழ்ப்பிரதேச செயலகங்களை நிறுவுவதற்கு பிரதமர் இணங்கியுள்ளதுடன் அவருடனான நேற்றைய சந்திப்பு வெற்றியளித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தலைமையிலான அம்பாறை தமிழ்ப்பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாநகரசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று மாலை கொழும்பில் சந்தித்தது.
இச்சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவுக்கும் போதே கோடீஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாம் கொண்டு சென்ற திட்ட முன்வரைவினை கையளித்து அதற்கான நியாயமான காரணங்களை எடுத்துரைத்தோம்.
எமது கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார். சில கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை பிரதமர் எடுத்துள்ளதனாலும் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை பூரணமாக ஆதரிப்பதென முடிவானது.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலின் போது புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்குமாறு அந்த இடத்தில் வைத்தே பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஒரு மணிநேரம் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு வெற்றியளித்துள்ளது.
அம்பாறை தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள், கல்வி, சுகாதாரம், சமூக பொருளாதார விடயங்களை உள்ளடக்கியதாக இவ்வரைபு வரையப்பட்டிருந்தது.
கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்ததல் மற்றும் பொத்துவில் பிரதேசத்துக்குட்பட்ட கோமாரி தனிப்பிரதேச செயலகம், சம்மாந்துறைப் பிரதேசத்திற்குட்பட்ட மல்வத்தை தனிப்பிரதேச செயலகம் உருவாக்கல், என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
உடனடியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தனியான கணக்காளர் நியமிப்பதற்கும் உரிய அமைச்சருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை கரையோர தமிழ்ப் பிரதேச வைத்தியசாலைகள் தொடர்ச்சியாக கல்முனை சுகாதார பணிமனையால் புறக்கணிக்கப்பட்டு வந்ததன் காரணமாக அவற்றை அம்பாறை சுகாதாரப் பிரிவுடன் இணைத்தல் அல்லது தனியான பிரிவை ஏற்படுத்தல் என்ற கோரிக்கைக்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. கல்முனை தமிழ் கல்வி வலயம் உருவாக்குவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது.
கடந்த காலங்களைப் போல் எவ்வித கோரிக்கைகள் அல்லது நிபந்தனைகளை முன்வைக்காமல் அரசுக்கு வழங்கிய ஆதரவால் எவ்வித பலனும் அம்பாறை தமிழ்மக்களுக்கு கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் பலகோணங்களிலும் நசுக்கப்பட்டு வந்தார்கள். புறக்கணிக்கப்பட்டு வந்தார்கள். எனவே, இனியும் அவ்விதம் தொடர முடியாது.
இருப்பதையாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது. எதிர்காலத்தில் இதுவரை யாரும் எதிர்பார்க்காதவகையில் அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களின் அரசியல் பாதை புதுவடிவம் பெறலாமென கூறியுள்ளார்.
இச்சந்திப்பின் போது பிரதமர் ரணிலுடன் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment