43 வருடங்களுக்கு முன்.. !

இலங்கையில் இடம் பெற்ற விமான விபத்து...

182 ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு

மக்கா  நோக்கி பயணித்த போது சம்பவம்

1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடைச் செய்த சம்பவம் அது
 இந்தோனேசியாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த Martin Air Dc 8 ரக விமானம், ஹட்டன், நோட்டன் ஏழுகன்னியர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் நடைபெற்று நேற்றுடன் 43 வருடங்கள் நிறைவடைந்துள்ளனஇவ்விபத்தினால், விமானிகள் உட்பட 191 பேர்  அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர். இவர்களில் 190 பேரின் உடல்கள்;, கொத்தலென கந்த என்று அழைக்கப்படும் அவ்விடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன.
ஓரளவு அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமான பணிப் பெண்ணின் உடலை, அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றார்.


அவ்விடத்தில் சேகரிக்கப்பட்ட டொலர் தாள்கள் இன்னோரன்ன பொருட்களை அப்பிரதேச மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
அணைவரையும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுத்தூண் ஒன்றும் அமைந்துள்ளது. ஆனால் இன்று அப்பகுதி காடாக காட்சியளிக்கின்றமை கவலைக்குரியதாக இருக்கின்றது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 4ஆம் திகதி இந்தோனேசியாவிலிருந்து உறவினர்கள் இவ்விடத்திற்கு வந்து செல்வது பலருக்கு தெரியாத விடயமாகவுள்ளது. விமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து சம்பவம் நடந்த இடத்தில் வசித்தவர்கள் இன்னமும் அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு சம்பவத்தை எடுத்துக்கூறுபவர்களாகவும் உள்ளனர். இவ்விமானத்தை செலுத்திய விமானி 8 தடவைகள் இலங்கை மார்க்கமாக மக்காவிற்கு விமானத்தை செலுத்திய அனுபவஸ்தர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும். இவ்வருடம் டிசம்பர் 4ஆம் திகதியுடன் இவ்விபத்து இடம்பெற்று 43 வருடங்கள் கடந்துவிட்டன.
விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் சில்லு ஒன்று மட்டும் இதுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த சில்லானது, இச்சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில், நோட்டன் விமலசுரேந்திர அணைக்கட்டுக்கு செல்லும் வழியில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்னமும் இச்சம்பவம் குறித்த நினைவுகளில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top