மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கு

எந்த தடையும் இல்லை! 



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் எஸ்.சுபைர்தீன், கட்சியின் செயலாளராக தொடர்ந்தும் இயங்குவதற்கு எந்தவிதமான தடையும் இல்லையென, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விடுத்திருந்த அறிவிப்புக்கு எதிராக, கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி விசாரணைக்காக மீண்டும் எடுத்துக்கொள்வதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை (04/ 12/ 2017) அறிவித்தது.
மக்கள் காங்கிரஸின் செயலாளராக எஸ்.சுபைர்தீன் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கட்டாணையையும் (Enjoining), இடைக்காலத் தடை உத்தரவையும் (Injunction Order) பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீத், மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரான வை.எல்.எஸ். ஹமீதின் கோரிக்கையை ஏற்க மறுத்து, 15 ஆவது பிரதிவாதியான எஸ்.சுபைர்தீன் செயலாளராக தொடர்ந்தும் செயற்படுவதில் எந்தவிதமான தடைகளும் இல்லையென கடந்த ஜூலை 24 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் 15 ஆவது பிரதிவாதியான எஸ்.சுபைர்தீன், செயலாளராக இயங்குவதற்கு தடை உத்தரவை வழங்க மறுத்தமையை ஆட்சேபித்து மனுதாரரான வை.எல்.எஸ். ஹமீத், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கையே மேற்கொண்டு விசாரணை செய்ய நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. செயலாளர் எஸ்.சுபைர்தீன் சார்பில் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்வரும் தேர்தல்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது கட்சியின் மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கு, இந்த மேன்முறையீட்டு வழக்கு எந்தவிதமான தடையையும் ஏற்படுத்தாது என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top