இலங்கையுடனான தொடரை வென்று

உலக சாதனையை சமன் செய்தது இந்தியா



இலங்கை - இந்திய அணிகளுக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.
டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி இனிங்ஸில், 410 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இலங்கை அணி விளையாடியது.
ஐந்து விக்கட்களை இழந்து 299 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் போட்டி நிறைவுபெற்றது. இலங்கை அணியின் அறிமுக வீரர் ரோஷன் சில்வா 154 பந்துகளில் 74 ஓட்டங்களையும் நிரோஷன் டிக்வெல்ல 72 பந்துகளில் 44 ஓட்டங்களையும் பெற்றிருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
முன்னதாக தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்த தனஞ்சய டி சில்வா, 119 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. அதாவது 2015-ம் ஆண்டில் இலங்கை (2-1), தென்ஆப்பிரிக்கா (3-0), 2016-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் (2-0), நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), 2017-ம் ஆண்டில் வங்காளதேசம் (1-0), ஆஸ்திரேலியா (2-1), இலங்கை (3-0) ஆகிய அணிகளை புரட்டியெடுத்தது.
இப்போது இலங்கையுடனான டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி உலக சாதனையை சமன் செய்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை ருசித்த அணியாக இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் திகழ்கிறது. அந்த அணிகள் தொடர்ந்து 9 தொடர்களை வசப்படுத்தி இருந்தது. இந்த உலக சாதனையை இந்தியா இன்று சமன் செய்து அசத்தியுள்ளதால் பலரும் இந்திய அணிக்கு தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top