பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலைக்கான

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.

சிறுநீரக நோயாளர்களின் நலன்கருதி நிர்மாணிக்கப்படவுள்ள பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கோரிக்கையின் பேரில் சீன அரசாங்கத்தின் நட்புறவின் அன்பளிப்பாக பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய சிறுநீரக மருத்துவமனைக்கு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
சீன அரசாங்கத்தின் 120 கோடி ரூபாய் நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ள இந்த சிறுநீரக நோயாளிகளுக்கான வைத்தியசாலை தெற்காசியாவில் நிர்மாணிக்கப்படும் மிகப் பெரிய வைத்தியசாலை ஆகும்.
இந்த வைத்தியசாலையில் சகல வசதிகளும் கொண்ட 200 கட்டில்கள் நோயாளர்களுக்காக அமைக்கப்படவுள்ளது. வெளிநோயாளர் சேவை பிரிவும் இதில் அமையவிருக்கிறது.
மேலும் , சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்த மாற்று வசதி வழங்கும் 100 கட்டில்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் நிர்மாணப் பணிகளுக்கு ஆயிரத்து 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுநீரக நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சைகள் உள்ளிட்ட சகல சேவைகளையும் இந்த வைத்தியசாலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பிரதி அமைச்சர் பைசல் காசிம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க, பொலன்னறுவை பொது மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இந்திக்க சம்பத் குமார ஆகியோரும் இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷியென்லியங் உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top