மீள அறிவிக்கும் வரை மீனவர்கள்
கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
எதிர்வரும் 24 மணி நேரத்தில் நாட்டை சூழவுள்ள பகுதியிலும், கடல் பகுதியிலும் காற்றின் வேகம் வலுவடையும் நிலை காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையிலிருந்து சுமார் 1300 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலையமானது, எதிர்வரும் 24 மணி நேரத்தில் தாழமுக்கமாக மாற்றமடைவதே இதற்கு காரணம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில், குறிப்பாக நாளைய தினம் (05) முதல் நாட்டிலும், நாட்டை சுற்றிய கடற்பிரதேசங்களிலும் விசேடமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்காலப்குதியில் நாட்டின் வடக்கு, வட மத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டின் கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கடும் மழை (75 மில்லி மீற்றருக்கும் அதிக) வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அத்துடன் நாட்டின் மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடையிடையே பலமான காற்று காணப்படும் என (மணிக்கு சுமார் 50 கிலோ மீற்றர்) திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, காற்றின் வேகம் பலமாக காணப்படும் எனவும், மின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment