ஹக்கீமால் ஏமாற்றப்பட்டிருக்கும் சாய்ந்தமருது மீனவர்கள்


4 வருடங்களும் 9 மாதங்களுக்கும் முன்

மீனவர்கள்  மத்தியில் வழங்கிய வாக்குறுதி



மீன்பிடி துறைமுகங்கள், மீனவர்கள் செறிந்து வாழும் சாய்ந்தமருது போன்ற கரையோரப் பிரதேசங்களை மையப்படுத்தியே அமைக்கப்பட வேண்டும் இது அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்படும்.
அமைச்சர் ஹக்கீம் 4 வருடங்களும் 9 மாதங்களுக்கு முன் சாய்ந்தமருது மீனவர்கள் மத்தியில் இவ்வாறு தெரிவிப்பு!!!!!
செய்தி விபரம் வருமாறு,
=======================================================================

சாய்ந்தமருது மீனவர்களின் பிரச்சினைகளை
தீர்ப்பதில் அரசு இழுத்தடிப்பு;
அமைச்சர் ஹக்கீம் விசனம்!

(டாக்டர் .ஆர்.எம்.ஹாபிஸ்)

மீன்பிடி துறைமுகங்கள், மீனவர்கள் செறிந்து வாழும் சாய்ந்தமருது போன்ற கரையோரப் பிரதேசங்களை மையப்படுத்தியே அமைக்கப்பட வேண்டுமென்பதை அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்குவதாக குறிப்பிட்ட அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்ஹக்கீம், பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட  தென்கிழக்கு கரையோர மீனவக் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளையும் இயன்றவரை துரிதமாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மீனவர்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து, அவற்றிற்கு தீர்வு காணும் முகமாக கடந்த 2013.05.23 ஆம் திகதி வியாழக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் (தற்போதய பிரதி அமைச்சர்) தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
முக்கியமாக இவ்வாறான பிரதேசங்களில் வசிக்கும் வறிய மீனவர்களின் மீன்பிடி வலைகள், வள்ளங்கள் என்பன போன்றவை தென்பகுதி மீனவர்களால் களவாடிச் செல்வது பற்றி அமைச்சரின் கவனத்திற்கு அம்பாரை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிச் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ஹமீட், உபதலைவர் .எம்.றஹீம் ஆகியோர் உட்பட மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டோர் கொண்டு வந்தனர்.
இந்த பிரதேசத்தில் ஏறத்தாழ 16ஆயிரம் மீனவர்கள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் 35 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவிருந்த நங்கூரமிடும் தளத்திற்கு என்ன நடந்தது என்பது இன்னமும் மர்மமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இவ்வாறான மீனவர் பிரச்சினை சம்பந்தமாக தாம் அண்மையில் இரு தடவைகள் சம்பந்தப்பட்ட அமைச்சர் டாக்டர் ராஜிதசேனாரத்தினவை நேரில் சென்று சந்தித்து கதைத்ததாகவும் அமைச்சர் அவ்விடத்தில் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண மீன்பிடி நடவடிக்கைகளால் நாட்டிற்கு அதிக வருமானம் கிடைப்பதாக பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் மீன்பிடி அமைச்சர் இந்த வறிய மீனவர் சமூகத்தின் பரிதாபகரமான நிலைமையை தீர்த்து வைக்க வேண்டுமென்பதை தாம் மீண்டும் அவரிடம் வலியுறுத்துவதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
சில காலத்திற்கு முன்னர் ஆழ்கடலில் நூறு கடல் மைல் தொலைவிற்கு அள்ளுண்டு செல்லப்பட்ட இப்பிரதேச வள்ளமொன்றில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவர் மட்டுமே பல நாட்களின் பின்னர் உயிரோடு மீட்கப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் குற்றுயிராக இருந்து மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டதாகவும் மற்றையவர் ஆழ்கடலிலேயே மரணித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் செல்வராஜாவுடன் அமைச்சர் ஹக்கீம் உடனடியாகவே தொடர்பு கொண்டு தனது அதிருப்தியை வெளியிட்டார். மீனவர்களின் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு சுமகமாக தீர்ப்பதற்கு உதவுமாறும் கூறினார்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top