“முஸ்லிம் சமூகம் இனவாதத்தில்
நாட்டம் கொண்ட ஒரு சமூகம் அல்ல ”
அக்குறணையில் அமைச்சர் ரிஷாட்!
நாங்கள் வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய
சூழல் ஏற்பட்டுள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிடும்
வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று (04) அக்குறணை 06ஆம் கட்டையில்
இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர்
இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வில் உள்ளூராட்சித் தேர்தலில் சுயேச்சைக் குழுவில்
மெஷின் சின்னத்தில் போட்டியிடவிருந்த தலைமை வேட்பாளர் ரசீன் உட்பட நால்வர் அமைச்சர்
ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
முஸ்லிம்கள் அதிக விகிதாசாரத்திலும், அதிக எண்ணிக்கையிலும் வாழும்
இடங்களான அம்பாறை, திருகோணமலை, குருநாகல், கண்டி ஆகிய மாவட்டங்களில் எமது கட்சி தனித்துக்
களமிறங்கியுள்ளது. முஸ்லிம்களின் ஒன்றுபட்ட வாக்குப் பலத்தை உரியவர்களுக்குக் காண்பித்து
அதன்மூலம், சமூகத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, சமூகம் எதிர்நோக்கவுள்ள
ஆபத்துக்களைத் தடுத்தி நிறுத்தி நன்மைகளைப் பெற்றுக்கொள்வதை மையமாகக் கொண்டே, மக்கள்
காங்கிரஸ் இந்தத் தேர்தலில் நாட்டின் பல பாகங்களிலும் களமிறங்கியுள்ளது.
முஸ்லிம்களை இனவாதிகள் என்றும், கலவரங்களைத் தூண்டுபவர்கள் என்றும்
கதைகளைக் கட்டவிழ்த்து வருகின்ற இனவாதிகளும், இனவாதக் கட்சிகளும், நாம் இந்தப் பிரதேசத்தில்
அரசியல் செய்வதை தடுக்க முனைகின்றனர். காலாகாலமாக பேரினக் கட்சிகளுக்கும், தனித்துவக்
கட்சிக்கும் வாக்களித்து, எந்தவிதமான நன்மைகளையும் பெற்றுக்கொள்ளாத இந்தப் பிரதேசங்களில்
வாழும் முஸ்லிம்கள், எமது செயற்பாடுகளையும், அரசியல் நடவடிக்கைகளையும் அங்கீகரிக்கத்
தொடங்கிவிட்டனர். அதன் விளைவே நாங்கள் போகுமிடமெல்லாம் மக்கள் அலையலையாகத் திரள்கின்றனர்.
இதனைப் பொறுக்கமாட்டாத பேரினக் கட்சிகளே எம்மை “இனவாதிகள்” என்று கதை சொல்கின்றனர். முஸ்லிம்கள் ஆயுதக் கலாசாரத்தை விரும்பியவர்கள் அல்லர்.
வன்முறை மீது அவர்களுக்கு நாட்டமில்லை. கலவரங்களுக்கு எந்தக் காலமும் அவர்கள் வித்திட்டவர்களும்
அல்லர். கலவரங்களும், வன்முறைகளும் அவர்கள் மீது வலிந்தும், வேண்டுமென்றும் திணிக்கப்படுகின்றன.
எமது பள்ளியை அடித்து நொருக்கும்போதும், எமது மதக் கடமைகளைத் தடுக்கும் போதும், நாம்
சும்மா இருக்க வேண்டும் என்றா இவர்கள் விரும்புகின்றனர்?
எமது சமூகத்தின் மீது அடாவடித்தனங்கள் மேற்கொள்ளப்படும் போது,
அதனை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் பொலிஸார் மீது, எந்தவிதமான நடவடிக்கையும்
எடுக்காத பொலிஸ்மாஅதிபரை “பதவி விலகுங்கள்” என்று நாங்கள்
கூறினால் அதுவும் இனவாதமா? இனவாதத்தை இவர்களே தூண்டுகின்றனர்.
வடக்கிலிருந்து முஸ்லிம் சமூகம் உடுத்தஉடையோடு ஓடோடி வந்த போது,
கண்டி மக்களும் பாரிய உதவிகளை வழங்கியதை, நான் இன்று நினைத்துப் பார்க்கின்றேன். உண்மையான
மனிதநேயத்துடன் அவர்கள் எமக்கு உதவினர்.
வாக்குரிமை என்பது பலம்பொருந்தியது. புனிதமானது. அது அமானிதமானது.
அதனைப் பயன்படுத்தியே அரசாங்கத்திடம் இருந்தோ, அமைச்சர்களிடம் இருந்தோ அரச இயந்திரத்திடம்
இருந்தோ நாம் பெறவேண்டியதைப் பெறவேண்டும். எமக்குரித்தான பங்கை அவர்கள் தரவேண்டும்.
இல்லையெனில், நாம் வலிந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
அகதிச் சமூகத்தின் துன்பங்களைக் கண்டு தொடங்கிய இந்தப் பயணம்,
இன்று வேர்விட்டு, கிளைவிட்டு வியாபித்து நிற்கின்றது. தற்போது, வடக்கு, கிழக்குக்கு
வெளியே கண்டி போன்ற மாவட்டங்களிலே கால் பதித்துள்ளது. கொட்டில்களிலே கஷ்டப்பட்டுகொண்டிருந்த
அகதி மக்களுக்கு, இறைவனின் உதவியால் 10,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம். கோடிக்கணக்கான
ரூபாய்களை அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு செலவிட்டுள்ளோம்.
ஆயிரக்கணக்கானோருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ளோம்.
நூற்றுக்கணக்கான பள்ளிகளை அமைத்துக் கொடுத்திருக்கின்றோம். இறைவனின் உதவியால் இதனை
நாங்கள் முன்னிறுத்தி செயற்படுகின்றோம். நாங்கள் நேர்மையான முறையில் இவற்றைச் செய்திருக்கின்றோம்.
ஆனால், காலாகாலமாக நீங்கள் பேரினக்கட்சிகளுக்கே வாக்களித்து,
எந்தவிதமான நன்மைகளையும் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என்று தெளிவாகத் தெரிகின்றது.
கண்டி மாவட்டத்தின், முஸ்லிம் பிரதேசங்களில் இருக்கும் பாதைகள்
பயணிக்க முடியாத நிலையில் இருக்கின்றன. முஸ்லிம்கள் வாழும் இடங்களிலே சுகாதார வசதிகள்
சரியான முறையில் இல்லை. சில இடங்களில் லொறிகளிலேயே பயணிக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.
அரசியல் அதிகாரத்தை உங்களின் வாக்குகளால் பெற்றவர்கள் உங்களுக்கு எதையுமே செய்யவில்லை.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்த அக்குரணை பிரதேசத்தில் உள்ள மக்கள் எமக்கு ஒருமித்து
வாக்களித்து, அக்குரணை பிரதேச சபையை எமக்கு வழங்கினால், நாங்கள் இந்தப் பிரதேசத்தை
திட்டமிட்டு அபிவிருத்தியடையச் செய்வோம் இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கண்டி மாவட்ட மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரும், முன்னாள் மாகாண
சபை உறுப்பினருமான ஹம்ஜாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் கண்டி
மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் உட்பட பலர் உரையாற்றினர்.
-சுஐப் எம்.காசிம்-
0 comments:
Post a Comment