எங்களின் பிரதிநிதித்துவம் என்பது சராசரி
ஒரு அரசியல்வாதியின் பிரதிநிதித்துவமல்ல.
சாய்ந்தமருது மக்களின் உணர்வின் குரலாக
நாம் சபைக்கு
வந்திருக்கின்றோம்
சாய்ந்தமருது 21
ஆம் வட்டார
மாநகர சபை உறுப்பினர் அஸீம் சபையில் தெரிவிப்பு.
சாய்ந்தமருது மக்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தங்களுக்கென்று ஒரு தனியான உள்ளுராட்சி மன்றம் உருவாக்கம் பெறவேண்டுமென்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அதனை ஒரு உச்சபட்சமான போராட்டமாக முன்னெடுத்து அதனொரு அங்கமாகவே எமது பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனியான சுயேற்றைக் குழுவாக களமிறங்கி அதனூடாக பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கின்றோம். ஆகையால் இந்தப் பிரதிநிதித்துவம் என்பது சராசரி ஒரு அரசியல்வாதியின் பிரதிநிதித்துவமல்ல. மாறாக எமது மக்களின் உணர்வின் குரலாக நாம் இங்கு வந்திருக்கின்றோம்.
இன்று 26 ஆம் திகதி இடம்பெற்ற கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு கன்னி உரையாற்றியபோது சாய்ந்தமருது சுயேற்சைக் குழு சார்பான மாநகர சபை உறுப்பினர் அப்துல் றஹீம் முஹம்மது .அஸீம் இவ்வாறு தெரிவித்தார்.
சாய்ந்தமருது 21 ஆம் வட்டாரத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும்
மாநகர சபை உறுப்பினர் அப்துல் றஹீம் முஹம்மது அஸீம் தொடர்ந்து உரைநிகழ்த்துகையில்,
எமது கல்முனை மாநகர சபையின் முதலாவது மாதாந்த அமர்வில் கலந்து கொள்வதையிட்டு முதலில் இச்சபையின் அரசியல் பிரதிநிதித்துவத்தை எனக்கு நஸீபாக்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு முதலில் நன்றியையும், இரண்டாவாக எமது சாய்ந்தமருது மக்களின் கொள்கைக்காக உறுப்புரிமையாக்கிய எமது வாக்காளர்களுக்கும் எனது நன்றியை நினைவுபடுத்தியவனாக என் உரையின்பால் திரும்புகின்றேன்.
கௌரவ இச்சபையின் ஆறாவது முதல்வராகத் தெரிவுசெய்யப்பட்டு வீற்றிருக்கின்ற எமது மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியும் கல்முனை மாநகர சபையின் தொடர்ந்தேற்சியான உறுப்பினர் பதவியை வகித்து வருபவருமான கௌரவ.ஏ.எம்.றக்கீப் அவர்களுக்கு எமது சுயேற்சைக் குழுவின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கௌரவ சபை முதல்வரையும் மற்றும் எமது சக உறுப்பினர்களையும் விழித்துக் கொண்டவனாகவும்,
எமது கல்முனை மாநகர சபையின் கன்னி உரை நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றக் கிடைத்தமை எமது சாய்ந்தமருது மக்களின் உணர்வை இச்சபையில் பதிவாக்கி வைப்பதற்கு கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமாகவே இதனை நான் பார்க்கின்றேன்.
குறிப்பாக எமது சாய்ந்தமருது மக்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தங்களுக்கென்று ஒரு தனியான உள்ளுராட்சி மன்றம் உருவாக்கம் பெறவேண்டுமென்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அதனை ஒரு உச்சபட்சமான போராட்டமாக முன்னெடுத்து அதனொரு அங்கமாகவே எமது பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனியான சுயேற்றைக் குழுவாக களமிறங்கி அதனூடாக பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கின்றோம். ஆகையால் இந்தப் பிரதிநிதித்துவம் என்பது சராசரி ஒரு அரசியல்வாதியின் பிரதிநிதித்துவமல்ல. மாறாக எமது மக்களின் உணர்வின் குரலாக நாம் இங்கு வந்திருக்கின்றோம்.
அதனடிப்படையில் எமது ஊருக்கான தனியான உள்ளுராட்சி மன்றத்தின் நியாயங்களைப் புரிந்து அவ்வாறான ஒரு தனியான உள்ளுராட்;சி மன்றம் சாய்ந்தமருதுக்கு வழங்கப்படுகின்றபோது கல்முனை மாநகர சபையின் எந்தச் செயற்பாட்டுக்கும் குறிப்பாக முஸ்லிம் அரசியல் ஆளுமைக்கு எவ்விதமான பங்கங்களும் ஏற்படாது என்பதனை நிரூபித்திருக்கின்றோம்.
இந்த உண்மையை சபையிலிருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் மறுக்க மாட்டார்கள் என்று நான் நம்புகின்றேன். அதன் அடையாளமாக சபையின் முதல்வரும் ஏனைய உறுப்பினர்களும் ஏகமனதாக முடிவுசெய்து சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையொன்று வழங்குவதை இச்சபை அனுமதிக்கின்றது என்ற வகையில் கௌரவ மாநகர முதல்வர் ஒரு பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கமாகவும் தேவையாகவும் இருக்கின்றது என்பதை இச்சபையில் பதிவுசெய்து வைப்பதை விரும்புகின்றேன்.
கல்முனை மாநகர சபை எல்லையினுள் அமைந்திருக்கின்ற அனைத்து ஊர்களுக்கும் வழங்கப்படுகின்ற பொதுவான சேவைகளையும் குறிப்பாகத் தேவைப்படுகின்ற விடயங்களையும் எவ்விதமாக பாகுபாடுகளுமின்றி இச்சபை திருப்திகரமாகச் செய்யுமென்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அந்த வகையில் உள்ளுராட்சி மன்றங்களின் நோக்கத்திற்கு ஏற்ற வகையில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதங்களுக்கு அப்பால் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு கலந்துரையாடி சபையின் நடவடிக்கைகளை செவ்வனே நடாத்திச் செல்வதற்கு எமது பூரண ஆதரவை என்றும் நாங்கள் தருவதற்கு பின்வாங்கப் போவதில்லை.
அதேநேரம் பாகுபாடான சிந்தனையிலும் புறக்கணிப்பு நோக்கிலும் கட்சி நலனை முன்னுரிமைப்படுத்தி சமத்துவமான நிலைக்குப் புறம்பாக ஓரவஞ்சனையாக முன்னெடுக்கப்படுகின்ற எந்தச் செயலாக இருந்தாலும் அதற்கெதிரான கண்டனங்களையும் விமர்சனங்களையும் இந்தச் சபையில் முன்வைப்பதற்கு எந்தத் தயக்கத்தினையும் நாம் காட்டப்போவதில்லை என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் இவ்வாறு சாய்ந்தமருது 21 ஆம் வட்டாரத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும்
மாநகர சபை உறுப்பினர் அப்துல் றஹீம் முஹம்மது அஸீம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment