தேசிய நல்லிணக்கச் செய்தியை முன்கொண்டு செல்வதற்கு
பாடசாலை சிறந்ததோர் தளம்
– ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
தேசிய நல்லிணக்கச் செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்வதற்கு பாடசாலை சிறந்ததோர் தளமாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (27) இடம்பெற்ற அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பொன் விழா மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். நினைவுப் பலகையை திறந்து வைத்து மூன்று மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி பாடசாலை வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.
இந்த புதிய வகுப்பறை கட்டிடத்தில் பாடசாலையின் பழைய மாணவரான கோசல ஜயரத்னவினால் 7 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
ஜனாதிபதியின் வருகையை நினைவுகூரும் முகமாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.
50 ஆண்டு வரலாற்றில் இக்கல்லூரியில் சேவை செய்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டப்பட்டதுடன், கல்லூரியின் முதலாவது அதிபர் மற்றும் முதலாவது ஆசிரியருக்கு ஜனாதிபதி அவர்களினால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அனைத்து இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளின் ஊடாக தேசிய நல்லிணக்கம் குறித்து சமூகத்திற்கு சிறந்த செய்தியை வழங்க முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு பாடசாலை கல்வியினூடாக பாரிய பங்களிப்பை செய்ய முடியுமென்றும் குறிப்பிட்டார்.
இதே நேரம் அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தின் மூன்று மாடி வகுப்பறை கட்டிடம் மற்றும் கேட்போர் கூடத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (27) மாணவர்களிடம் கையளித்தார்.
பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். நினைவுப் பலகையை திறந்து வைத்து மூன்று மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள் பாடசாலை வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.
பிரபல பாடசாலைகளுக்கான போட்டித் தன்மைக்கு மத்தியில், ஒரு பாடசாலைக்கு அதிகளவு மாணவர்களை உள்வாங்குவதன் மூலம் அப்பாடசாலையின் நிர்வாகத்திலும் மாணவர்களின் புறச் செயற்பாடுகளிலும் வளங்களை பெற்றுக்கொடுப்பதிலும் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தேசிய கல்விக்கொள்கையை வகுக்கின்றபோது கவனத்திற் கொள்ளவேண்டியது அவசியமாகுமென்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இந்த நிலைமை வேறுபட்டது என்றும் அந்த அனைத்து நாடுகளை பார்க்கிலும் இலவசக்கல்விக்காக எமது நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து முழு தேசத்திற்கும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதற்காக பாடுபட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு அரச நாடக விழாவில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கல்லூரியின் நாடகக் குழுவுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கி வைத்தார்.
0 comments:
Post a Comment