புதிய உள்ளுராட்சி தேர்தல் முறையை ஆராய
கல்விமான்கள் குழு.
புதிய உள்ளுராட்சித் தேர்தல் முறையை பரிசீலிக்க கல்விமான்கள் குழுவை நியமிக்கப் போவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000லும் பார்க்க அதிகமானது. இந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார்.
பெண்களின் விகிதாசாரம் 25 வீதமாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் வட்டாரமுறையையும் உள்ளடக்கிய கலப்புமுறை என்பவற்றால் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களின் விகிதாரசம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கிச் சென்றமையால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இம்முறை 1919 பெண்கள் தெரிவாகியுள்ளனர். அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய கட்சிகளையும் திருப்திப்படுத்தும் வகையில் திருத்தங்களை மேற்கொண்டமையும் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார்.
உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் நடைமுறைச் சிக்கல்கள் பல எழுந்துள்ளன. இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ளோம். சட்டத்திருத்தத்தை வரைவதற்காக நிபுணர்கள் குழுவொன்று விரைவில் நியமிக்கப்படும். மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்கள், பொது மக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.
மோசடி நிறைந்த விருப்புவாக்கு முறைக்குச் செல்லப் போவதில்லை. பழைய முறைக்குச் செல்வதில்லையென்ற நிலைப்பாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் பற்றி சகல தரப்புக்களினதும் கருத்தறிந்து திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயாராக உள்ளது. தேர்தல்களைப் பின்போடும் தேவை அரசாங்கத்திற்குக் கிடையாது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவொரு அச்சத்தையும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் கூறினார்.
0 comments:
Post a Comment