வருடாந்தம் சராசரியாக பத்தாயிரம் ஆசிரியைகள்
பேறுகால விடுமுறையில்
புதிய பிரச்சினைக்கு தீர்வாக
ஆசிரியர் குழாம் அமைப்பது பற்றி கரிசனை

வருடாந்தம் சராசரியாக பத்தாயிரம் ஆசிரியைகள் பேறுகால விடுமுறைகள் உள்ளிட்ட விடுப்புக்களில் செல்கிறார்கள். இந்த சமயத்தில் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க கல்வி வலய மட்டங்களில் ஆசிரியர் குழாம்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். அதிபர் சேவை 2 ஆம் வகுப்பில் இருந்து அதிபர் சேவை 1 ஆம் வகுப்பிற்கு பதவி உயர்வு பெற்ற 263 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இது தவிர பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை வவுச்சரின் பெறுமதியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சும் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போது அதிபர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்ததோடு யோசனைகளையும் சமர்ப்பித்தார்கள். பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக சீருடை பெறுவதற்காக வவுசர் வழங்கும் முறை அறிமுகம் செய்தது தொடர்பில் அதிபர்கள் பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். சீருடையின் பெறுமதியை அதிகரிப்பது தொடர்பிலும் கருத்து முன்வைக்கப்பட்டது. வவுசரின் பெறுமதியை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆசிரியைகளில் சுமார் 10 ஆயிரம் பேர் வருடாந்தம் பிரசவ விடுமுறையில் செல்கின்றனர். இது தவிர வேறு காரணங்களுக்கும் ஆசிரியர்களினால் விடுமுறைகள் பெறப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு ஏற்படும் இடையூறினை தவிர்ப்பதற்காக பாடசாலைகளில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக வலய மட்டத்தில் ஆசிரியர் குழாங்களை உருவாக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top