அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான
போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை



ஜிஹானி வீரசிங்க என்ற பெண்மணியை லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டுக்கு  கைத்தொழில் வரத்தக அமைச்சு அழைத்துச் செல்லவில்லை எனவும் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் போலி இணையத்தளங்களிலும்   அமைச்சர் றிஷாட் பதியுதீனை    தொடர்புபடுத்தி வெளிவந்த அனைத்து  செய்திகளும்   அப்பட்டமான, திட்டமிட்டு பரப்பிய பொய் என்றும் அமைச்சரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்றிருந்த ஜனாதிபதி,  அங்கு வாழும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடினார். சந்திப்பின் பின்னர் அங்கு வருகை தந்திருந்த லண்டன் வாழ் இலங்கையர்கள், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்தனர்.

அவ்வாறான புகைப்படங்களே சமூக வலைத்தளங்கள், மற்றும் இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டு, விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.

லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கோ  பொதுநலவாய வர்த்தக   மாநாட்டுக்கோ ஜிஹானி வீரசிங்க என்ற பெண்மணி உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் அழைத்துச் செல்லப்படவில்லை என்பதை வர்த்தக கைத்தொழில் அமைச்சு பொறுப்புடன் தெரிவிக்கின்றது. குறித்த இந்தப் பெண்மணி லண்டனுக்கு சென்றதற்கும் கைத்தொழில் வர்த்தக அமைச்சு அல்லது நிதி அமைச்சு ஆகியவற்றுக்கும்  எந்தவிதமான தொடர்புமில்லை. அதே போன்று ஜனாதிபதி ஊடகப்பிரிவும் இந்த செய்தியை முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே அமைச்சர் றிஷாட் பதியுதீனின் நற்பெயருக்கு களங்கம் எற்படுத்தும் நோக்கில் இந்தப் பெண்மணியை தொடர்புபடுத்தி  திட்டமிட்டு பரப்பப்பட்ட இச்செய்தியை வெளியிட்ட இணையத்தளத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது.
ஊடகப்பிரிவு

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top