அமெரிக்க கடற்படை மருத்துவர்களுக்கு அனுமதி மறுத்த

இலங்கை மருத்துவர் சங்கம்




திருகோணமலைக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், இலங்கையில் மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பசுபிக் ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்,  1000 படுக்கைகள், 12 அறுவைச் சிகிச்சைக் கூடங்கள், அதிநவீன பரிசோதனை வசதிகளைக் கொண்ட அமெரிக்க கடற்படையின், USNS Mercy என்ற மிதக்கும் மருத்துவமனை கடந்த 25ஆம் திகதி திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது.
எதிர்வரும் மே 8ஆம் திகதி வரை திருகோணமலையில் தரித்து நிற்கவுள்ள இந்த மிதக்கும் மருத்துமவனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் கடற்படையினர், திருகோணமலைப் பகுதியில் மருத்துவ உதவிகள், பொதுப்பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
இந்தக் கப்பலில் வந்துள்ள அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள், மற்றும் மருத்துவ பயிற்சியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்களுக்கு தற்காலிக பதிவுகளை வழங்குவதற்கு இலங்கை மருத்துவர் சங்கம் மறுத்துள்ளது.
இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்க போதிய நேரம் இல்லாமை மற்றும் விண்ணப்பங்கள் தெளிவாக இல்லாமை காரணமாக அவை நிராகரிக்கப்பட்டதாக இலங்கை மருத்துவர் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை கடற்படையின் வேண்டுகோளின் பேரில் இந்த விண்ணப்பங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.

மருத்துவர்களுக்கான தற்காலிக பதிவு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், USNS Mercy கப்பலில் வந்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மருத்துவர்களால், திருகோணமலைப் பகுதியில் மருத்துவ சிகிச்சைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தக் கப்பலில் உள்ள மருத்துவக் குழுக்கள், கிழக்கில் மருத்துவ சேவை கண்காணிப்பில் மாத்திரம் ஈடுபடவுள்ளன.
அமெரிக்க கப்பலில் வந்த மருத்துவர்கள் இலங்கை கடற்படை முகாம்களில் மருத்துவ சேவைகளை வழங்கத் திட்டமிட்டிருந்தனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top