திருகோணமலை சிறி ஷண்முக மகளிர் கல்லூரி

பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைக்க உதவுமாறு
சம்பந்தன் ஐயாவிடம்அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!




சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திருகோணமலை சிறி ஷண்முக இந்து மகளிர் கல்லூரி அபாயா பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருகோணமலை சிறி ஷண்முக இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
திருகோணமலை சிறி ஷண்முக இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் ஆசிரியர்களின்அபாயாவிவகாரத்தில் தலையிட்டு இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைக்க மூத்த அரசியல்வாதியான நீங்கள் உதவ வேண்டும். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி தமிழ்முஸ்லிம் உறவை சீர்குலைக்க முற்படும் சக்திகள் குறித்து நாம் விழிப்பாயிருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
சிங்கள, தமிழ், முஸ்லிம்  ஆகிய மூவினமும் பரஸ்பர புரிந்துணர்வுடனும், நிம்மதியாகவும் வாழும் திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருப்பது, இனங்களுக்கிடையிலான உறவை சீர்குலைக்கும் துரதிஷ்ட நிலைக்கே வழிவகுக்கும்.

யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் தமிழ்முஸ்லிம் உறவு தழைத்தோங்கி மலர்ந்து வரும் தற்போதைய கால கட்டத்தில், இவ்வாறான சிறிய சம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட்டு இரு இனங்களுக்கிடையிலான சச்சரவாக, அது மாறுவதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது.
திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுடன் நீண்டகாலமாக நல்லுறவுடனும், அந்நியோன்னியமாகவும் வாழும் உங்களைப் போன்ற மூத்த தலைவர்களுக்கு முஸ்லிம்களின் சமய, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் நன்கு தெரியும். அது மட்டுமன்றி நான் உட்பட நான் சார்ந்த சமூகமும் உங்களை ஒரு நீதியான, நேர்மையான அரசியல் தலைவராகவே கருதி வருகின்றோம். அநியாயங்களுக்கு நீங்கள் ஒரு போதுமே துணை போனவர் அல்ல. அதேபோன்று இனியும் அவ்வாறு நீங்கள் அநீதியான செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். இந்தப் பிரச்சினையில் அவசரமாக நீங்கள் தலையிட்டு, சமரசத் தீர்வொன்றைக் காண வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.
முஸ்லிம்களின் கலாச்சார உடையானது இன்று, நேற்று திடீரென்று வந்த ஒன்றல்ல என்பதை, முஸ்லிம்களுடன் நெருங்கிப்பழகும் நீங்கள் நன்கறிவீர்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மொழி பேசும் சிறுபான்மைச் சமூகமாகும். கடந்த காலங்களில் இரண்டு சமூகங்களுக்கிடையிலான சிற்சில  பிரச்சினைகளை பூதாகரமாக்கி, பிளவுகளை ஏற்படுத்தி அவற்றில் குளிர்காய பல்வேறு தீய சக்திகள் ஈடுபட்டன. அதே போன்று மீண்டும் தமிழ்முஸ்லிம் உறவை சீர்குலைத்து ஆதாயம் தேட சில தீயசக்திகள் மீண்டும் முற்பட்டு வருகின்றன.
எனவே இனியும் இரண்டு சமூகங்களும் ஒருவரொடு ஒருவர் புரிந்து வாழவும், ஒருவரை ஒருவர் மதித்து வாழவும் சிறந்த அடித்தளம் கட்டியெழுப்பப்பட  வேண்டியது காலத்தின் தேவையாகும்.
அந்தவகையில், தற்போது மீள உருவாகி வரும் ஒற்றுமையையும், இன சௌஜன்யத்தையும் சிதைத்து, சின்னாபின்னமாக்குவதற்கு இவ்வாறான சிறிய சம்பவங்கள் கால்கோளாக அமைந்து விடக்கூடாது.

எனவே, திருகோணமலை மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழர்களின் தலைவராகவும் அனைத்து சமூகங்களினாலும் பெரிதும் மதிக்கப்படுபவரான நீங்கள், திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூகத்தலைவர்கள், இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டோர் மற்றும் கல்விசார் ஆர்வலர்கள் அனைவரையும்  அழைத்து, சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தப்பிரச்சினைக்கு சுமூகமான, நியாயமான தீர்வை ஏற்படுத்துமாறு நான் அன்பாய் வேண்டுகின்றேன் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-ஊடகப்பிரிவு


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top