மே 8ஆம் திகதி இடம்பெறவிருக்கும்
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீது
வாக்கெடுப்பு நடக்காது



எதிர்வரும் மே 8ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஆரம்பிக்கப்படும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவார் என்றும், எனினும் அந்த உரை மீது விவாதமோ, வாக்கெடுப்போ நடத்தப்படாது என்றும் கூறப்படுகிறது.
கடந்த 12ஆம் திகதி நள்ளிரவில் இருந்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளார். மே 8ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் போது, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கொள்கை விளக்க உரையை தோற்கடிப்பதன் மூலம், நாடாளுமன்றத்தை கலைக்கச் செய்யும் திட்டம் ஒன்றை கூட்டு எதிரணியினர் முன்னெடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், ஜனாதிபதியின் உரை சிம்மாசன உரை அல்ல என்றும் அது கொள்கை விளக்க  உரை மாத்திரமே என்றும் கூறப்படுகிறது.
இதனால், இந்த உரையின் மீது விவாதம் நடத்தப்படவோ, வாக்கெடுப்பு நடத்தப்படவோ சாத்தியமில்லை என்றும் அரசியல் பிரமுகர்கள், சட்ட நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பில்,  நாடாளுமன்றம் ஜனாதிபதியினால் முடக்கப்பட்டு மீண்டும் கூட்டப்படும் போது, அரசாங்கத்தின் கொள்கையை விளக்கி உரையாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த உரை மீ)து விவாதம் நடத்தவோ, வாக்கெடுப்பு நடத்தவோ, அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதி சிம்மாசன உரை  நிகழ்த்தும் திட்டம் இல்லை என்றும், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய கொள்கைப் பிரகடனத்தையே அவர் வெளியிடுவார் என்றும் அமைச்சர் ஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எத்தகைய விவாதமும் அல்லது வாக்கெடுப்புக்கும் அரசாங்கம் தயாராகவே இருக்கிறது அச்சம் கொள்ளவில்லை என்று  ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top