முஸ்லிம்
ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக
நீதியான
தீர்வு காண அழைப்பு
திருகோணமலை - ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூயில்
கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளும் அதன்
பின்னர் நிகழ்ந்து வரும் சம்பவங்களும் கவலையளிக்கின்றன என நல்லாட்சிக்கான தேசிய
முன்னணி தெரிவித்துள்ளது.
ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும்
முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் NFGG வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு
கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொடந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாடசாலை மட்டத்தில் நிர்வாக ரீதியாக தீர்க்கப்பட்டிருக்க
வேண்டிய விடயம் இரண்டு சமூகங்களுக்கிடையிலான விரிசலாக மாறிவிடக் கூடாது. இந்த
விடயத்தில் ஒவ்வொருவரும் தமது பொறுப்பினை தத்தமது சமூகங்களின் பக்கம் நில்லாது
நீதியின் பக்கம் நின்று அணுக வேண்டும்.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.
சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில்
கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் தனித்துவமான ஆடை தொடர்பாக எழுந்துள்ள
சர்ச்சையும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் மிகவும்
கவலையளிக்கின்றன.
சகலருக்குமான புதிய இலங்கையை கட்டியெழுப்பும் வகையில்
ஒவ்வொரு சமூகத்தவர்களினதும் கலாச்சார தனித்துவங்களை மதித்து பரஸ்பர
அனுசரிப்புகளோடு எல்லோரும் நடந்து கொள்ள வேண்டிய தருணத்தில் இது போன்ற சம்பவங்கள்
மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையினையும் தருகின்றன.
பாடசாலை மட்டத்தில் நிர்வாக ரீதியாக கையாளப்பட்டு தீர்வு
காணப்பட்டிருக்க வேண்டிய இவ்விடயம் இனவாத பிரதிபலிப்புகளைக் கொண்ட உடனடி
ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டமையினை எந்த வகையிலும் எற்றுக்கொள்ள முடியாது.
மட்டுமன்றி, முஸ்லிம் ஆசிரியையின் கணவரினால் அதிபர் மிரட்டப்பட்டார் என்ற ஒரு பிரதான
குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவசரமான இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவ்வாறு எவரும் தன்னை மிரட்டவில்லை என அந்த அதிபர் தற்போது பகிரங்கமாக
அறிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சினை திட்டமிடப்பட்ட வகையில் தீய நோக்கம் கொண்ட
நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பூதாகரமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளதாகவே நம்ப
வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு இலங்கை குடிமகனும் தான் விரும்பும் ஒழுங்கில் ஆடை
அணிவதற்கான சுதந்திரத்தினை இந்த நாட்டின் யாப்பு உத்தரவாதப்படுத்தியுள்ளது. அது
போலவே குறித்த இந்தப் பாடசாலை மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசாங்கப்
பாடசாலையாகும்.
இதற்கென கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று
நிரூபங்கள் இருக்கின்றன. இதன் பிரகாரம் சீரான உடைகளை அணிந்து வர வேண்டும் என
ஆசிரியர்களுக்கு சொல்லப்பட்டுள்ளதே தவிர இதைத்தான் அணிந்து வர வேண்டும் என்ற
நிபந்தனைகள் எதுவும் இல்லை.
இதனை அனுசரிக்கும் வகையில் சகல அரசாங்கப் பாடசாலைகளும்
நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களது கடமையாகும்.
முஸ்லிம் கலாச்சார தனித்துவங்களைப் பேணும் பாடசாலைகள்
அனைத்தும் பிற மத ஆசிரியைகளின் ஆடை விடயத்தில் எவ்வாறு சட்டத்தையும்
அடுத்தவர்களின் கலாச்சார தனித்துவங்களையும் மதித்து நடந்து கொள்கிறன என்பதனை
முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.
இந்தப் பின்னணியில் இந்த விடயமானது ஒரு பாடசாலையின்
உள்விவகாரமாகவும், நிருவாகத்துடன்
தொடர்பான நடவடிக்கையாகவும் சொல்லப்பட்டாலும், அடிப்படை உரிமை மீறலாகவே இது அமைந்துள்ளது.
எந்தவொரு பிரஜையினதும் அடிப்படை மற்றும் அரசியலமைப்பு
ரீதியாக உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும்.
ஒரு தரப்பின் தனித்துவத்தை, இன்னொரு தரப்பினர் மீது திணிப்பது கலாச்சார
அத்துமீறலாகவே கருதப்பட வேண்டும்.
இலங்கையின் பன்மைத்துவத்தை மதித்து, பல்லினக் கலாச்சாரத்தை பேணிப் பாதுகாக்க
வேண்டிய கடப்பாட்டை நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் கொண்டுள்ளோம்.
சக சமூகத்தினரதும், பிரஜைகளதும் சுயாதீனத்தை மதித்து நடக்க வேண்டிய தேவை முன்பை
விடவும் சம காலத்தில் மிக அதிகமாக உணரப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இதில் தலையிட்டு,
சுமுக நிலையை ஏற்படுத்த
வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டிக் கொள்கிறது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.