முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள்
திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்,
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை
அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்
அமைச்சர் ரிஷாட் கவலையுடன் தெரிவிப்பு
கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள், மிகவும் திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதெனவும், உள்ளூர் ஏஜெண்டுகள் கூலிக்கு அமர்த்தப்பட்டு, இவ்வாறான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இலங்கை – மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் அவர்களை இன்று காலை (25) கைத்தொழில், வர்த்தக அமைச்சில் சந்தித்த போதே, அமைச்சர் இவ்வாறு கவலையுடன் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின் போது, பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நீல் கவனாஹ் ஒபேயும் பங்கேற்றிருந்தார்.
அமைச்சர் ரிஷாட் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வன்முறைகளின் பாதிப்புக்களிலிருந்து அந்த சமூகம் இன்னும் விடுபடாமல் இருக்கின்றது. கடந்த அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் மீது அட்டூழியங்கள் நடாத்தப்பட்டன. அதேபோன்று, இந்த அரசிலும் அவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்படவில்லை. கண்டிச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரோ, பாதுகாப்புப் படையினரோ உரிய வேளையில் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு தொடர்பில், பிரித்தானிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிகள் மீது நடாத்தப்பட்டு வருகின்ற இந்த சம்பவங்களைத் தொடர அனுமதிக்க வேண்டாமென்று இலங்கை அரசுக்கு, பிரித்தானியா எடுத்துரைத்து, இன நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கக் வேண்டும்.
இன நல்லிணக்கம் என்பது, நிறுவனங்களையோ, தாபனங்களையோ உருவாக்கி அதன்மூலம், எதிர்பார்த்த அடைவைப் பெறமுடியாது. அரசியல்வாதிகளாலோ, மதத் தலைவர்களாலோ வெறுமனே இன சௌஜன்யத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற கோட்பாடு வெற்றியளிக்கப் போவதில்லை.
மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஜனரஞ்சகமான கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களை இன உறவுப் பாலமாகப் பயன்படுத்தி, சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் உருவாக்க முடியுமென்றே நான் நம்புகின்றேன்.
30 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டு தென்னிலங்கை பிரதேசத்தில் வாழும் வடமாகாண முஸ்லிம்களில் 30 சதவீதமானோரே, தற்போது மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியோரை மீள்குடியேற்றுவதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் பிரிவினைக்கு ஆதரவளிக்காததனாலேயே, அவர்கள் தமது பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்டனர். போர் முடிந்து அமைதி திரும்பிய பின்னர், முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பிரதேசங்களில் மீளக்குடியேறச் சென்ற போது, காடுகள் அங்கு வளர்ந்திருந்ததனால் அதனைத் துப்புரவாக்கும் போதே, முஸ்லிம்கள் காட்டை அழிப்பதாகவும், வில்பத்துவை நாசம் செய்கின்றனர் எனவும் இனவாதிகள் மிகமோசமாகக் கதை பரப்பினர். அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
தென்னிலங்கையில் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்டு வருகின்ற தாக்குதலுடன் தொடர்புடையவர்களே, வடக்கிலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இவர்களுக்கு பாரிய பின்புலம் உண்டு. அப்பாவிச் சிங்கள மக்கள் மத்தியிலே முஸ்லிம்களைப் பற்றி தவறான எண்ணங்களை விதைத்து, அவர்களை முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட வைப்பதே இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர், தற்கால இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள் பற்றி அமைச்சரிடம் கேட்டறிந்துகொண்டார். அத்துடன், அமைச்சர் தலைமை தாங்கும் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் ஆர்வத்துடன் அறிந்துகொண்டார்.
கடந்த வாரம் லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு, பொதுநலவாய வர்த்தக மாநாடு தொடர்பிலும், அதனால் இலங்கைக்குக் கிட்டிய பிரதிபலன்கள் தொடர்பிலும், கருத்துப்பரிமாறல்களும் இடம்பெற்றன.
பிரித்தானியாவுக்கும், இலங்கைக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு சிலாகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment