திருக்கோணமலை சண்முகா வித்தியாலய
நடவடிக்கைகள் எதனைச் சுட்டிக்காட்டுகிறது..?



வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒன்றாக வாழுவோம் வாருங்கள் என்பதையா?
வடக்கையும் கிழக்கையும் இணைத்து அதிகாரங்களைப் பெற்றதன் பின் உங்கள் கலாச்சாரத்தையே கடைப்பிடிக்க விடமாட்டோம் வாருங்கள் என்பதையா?
கடந்த பல வருடங்களாக தமிழர்கள் எங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்று சிங்கள அரசாங்கத்திடம் கேட்டு போராடிவருகின்றார்கள். அந்தவகையில் அது ஆயுதபோராட்டமாகவும் வடிவம் பெற்றிருந்தது என்பதையும் நாம் அறிவோம்.
நாடு சுதந்திரம் பெற்றகாலம்தொட்டு ஆட்சி செய்துவரும் சிங்கள அரசாங்கங்கள் தங்களுடை பௌத்த மதத்துக்கும், அவர்களுடை சிங்கள மொழிக்கும் முக்கியத்துவம் வழங்கி வந்ததோடு, இது சிங்கள பௌத்த நாடு என்றும் கூறமுற்பட்டபோதுதான், தமிழ் தலைவர்கள் தமிழ்பேசும் சமூகம் என்ற அடிப்படையில் தங்களோடு முஸ்லிம் சமூகத்தையும் இணைத்துக்கொண்டு மொழி அடிப்டையில் நாங்கள் ஒன்றானவர்கள் என்றும், எங்களுக்கு வடக்கு கிழக்கில் தனியான நிலப்பரப்பு உண்டென்றும், அதனைவைத்து எங்களுக்கு சுயாட்சி தரவேண்டுமென்றும் போராடிவருகின்றார்கள்.
இதனை மனதில் வைத்துக்கொண்டுதான் தமிழ் தலைவர்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்திலும், திருகோணமலை தீர்மானத்திலும் முஸ்லிம் மக்கள் எங்களைச் சார்ந்தவர்களென்றும், அவர்களும் நாங்களும் மத அனுஷ்டானங்களைத் தவிர மற்ற எல்லாவிடயங்களிலும் ஒத்துப்போகின்றவர்கள் என்றும், அதனால் அவர்களையும் எங்களையும் ஒரு சமூகமாக நினைத்து தீர்வைத் தரவேண்டும் என்றும் சிங்கள அரசாங்கங்களிடம் இன்றுவரை கேட்டும், போராடியும் வருகின்றார்கள்.
இந்த நிலையில் ஆயுதத்தை கையில்வைத்திருந்த தமிழ் இயக்கங்கள். அவர்களுடைய காலத்தில் முஸ்லிம்களை பல சொல்லொன்னா துயரங்களுக்கு ஆளாக்கினாலும், பேச்சுவார்த்தை என்றுவரும்போதும், பொது இடங்களில் பேசும்போதும், முஸ்லிம்களும் எங்களைச்சார்ந்த மக்கள்தான் அவர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் போராடுகின்றோம் என்றும் கூறிவந்தார்கள். அவர்களுடைய நோக்கம் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களை நீக்கிவிட்டு எந்த முழுமையான தீர்வையும் வடகிழக்கு இணைந்த மாகாணத்தில் பெற்றுவிட முடியாது என்பதனால். உள் மனதுக்குள் விரும்பம் இல்லாதுவிட்டாலும், வெளிப்படையாக அதனைக்காட்டிக்கொள்ளாமல் நடந்து வந்தார்கள் என்பதே உண்மையாகும்.
இந்த விடயங்களை அறிந்துகொண்ட முஸ்லிம்கள், நாங்கள் தமிழ்பேசும் மக்களாக இருந்தாலும், கலை, கலாச்சாரம், உடை, மத அனுஷ்டானங்கள் போன்றவற்றில் தனிவழியைப் பின்பற்றுவதனால் இந்தவிடயத்தில் நாங்களும் தமிழ் சகோதரர்களும் வெவ்வேறானவர்கள் என்று கூறிவருகின்ற அதேநேரம், இதனைத்தவிர மற்ற எல்லாவிடயங்களிலும் தமிழ் முஸ்லிம் உறவு நன்றாகவே இருந்துவருகின்றது என்பதையும் நடைமுறையில் நிரூபித்தும் வருகின்றார்கள்.
இந்த நிலையில்தான் கிழக்கிலே பெரும்பாண்மையாக வாழும் முஸ்லிம்கள் வடக்கோடு கிழக்கு இணைந்தால் எங்கள் அரசியல் அதிகாரம் குறைக்கப்படும் என்ற அச்சத்தையும் அவ்வப்போது தெரிவித்தும் வருகின்றார்கள். ஒருவேளை வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் அரசியல் அதிகாரம் தமிழர்களின் கைக்கு சென்றுவிடும்போது அதன் மூலம் எங்களுக்கு அநியாயம் நடந்துவிடலாம் என்று கிழக்கிலேவாழும் பெரும்பாண்மையான முஸ்லிம்கள் அச்சம் தெரிவிக்கின்றபோது, அப்படியொன்றும் நடந்துவிடாது என்று தமிழ் தலைவர்கள் எல்லா இடங்களிலும் நம்பிக்கையோடு கூறிவருகின்றார்கள். இதனை பெரும்பாண்மையான முஸ்லிம் சமூக மக்கள் கடந்த கால கசப்புணர்வுகளை மனதில்வைத்து இவர்களை நாங்கள் நம்பத்தயாரில்லையென்றே கூறிவருகின்றார்கள்.
இந்த நிலையில்தான் இதற்கு வழுச்சேர்ப்பதுபோன்றுதான் அண்மையிலே திருக்கோணமலை சண்முகா வித்தியாலயத்தில் நடந்த கபாயா எதிர்ப்பு போராட்டமாகும். இது தமிழ் மக்களுக்கு சொந்தமான பாடசாலையென்றும், அங்கே எங்களின் கலாச்சாரப்படிதான் முஸ்லிம் ஆசிரியர்கள் உடை அணிந்துவரவேண்டும் என்றும், கபாயா போன்ற முஸ்லிம்களின் அடையாள ஆடைகளை அணிந்துவர அனுமதிக்கமாட்டோம் என்றும் தமிழ் மக்களில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றதை நாம் அவதானித்து வருகின்றோம். (இந்த மாவட்டம் ஒற்றுமைபற்றி பேசிவரும், தமிழர்களின் தலைவரான இரா.சம்பந்தன் ஐயாவின் மாவட்டமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.)
ஒரு பக்கம் இணைந்து வாருங்கள் ஒன்றாக வாழுவோம் என்று அழைக்கின்றவர்கள். மறுபக்கம் எங்களோடு இணைந்து பயணிக்க முடியாது என்று இப்படியான செயல்களின் மூலம் நிரூபித்து வருகின்றதையும் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. இது தமிழர்களின் மீது முஸ்லிம்களுக்கு இருக்கும் அச்சஉணர்வை மேலும் ஊர்ஜிதபடுத்தும் நடவடிக்கையாகவே பார்க்கவேண்டியுள்ளது எனலாம்.
கடந்த காலங்களில் நடந்த தவறுகளுக்கு ஆயுதத்தை கையில் வைத்திருந்தவர்களின் மேல் பழியை போட்டுவிட்டு, தாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்று கூறும் இப்போதைய தமிழ் தலைவர்கள், இந்த விடயத்தை கண்டும் காணாதவர்கள்போல் இருப்பதன் அர்த்தம், நாங்களும் "பசுத்தோல் போத்திய புலிகள்தான்" என்று மறைமுகமாக காட்டிவருகின்றார்கள் என்பதே தெளிவாகின்றது எனலாம்.
ஒரு உடை விடயத்திலேயே ஒரு சமூகத்தை அனுசரித்துபோக முடியாதவர்கள் நாளை அதிகாரங்கள் கைக்கு வந்தால் பொலிஸ், காணி, நிதி விடயங்களில் எப்படி நியாயமாக நடந்து கொள்வார்கள் என்பதும் கேள்விக்குறிதான் என்பதை நமது அரசியல்வாதிகளும் புரிந்து நடந்து கொள்ளவேண்டும் என்பதுடன், கடந்த காலங்களில் வடக்கு கிழக்கிலே வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமிழ் ஆயுதக்குழுக்களினால் எவ்வளவோ கஷ்டத்தையெல்லாம் சந்தித்துவிட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கத்தான் அதன் வலியும் வேதனையும் புரியும். அப்படிப்பட்டவர்களின் என்னங்களையும் அச்சத்தையும் கணக்கிலெடுத்து எங்களின் தலைவர்கள் எதிர்காலத்தில் தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்தாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top