சாய்ந்தமருது வைத்தியசாலை
அபிவிருத்திக்கான ஓயாத போராட்டம்.




1947ம் ஆண்டுக்கு முன் சாய்ந்தமருதில் அரச வைத்தியசாலை ஒன்று அமைந்திருக்கவில்லை. சம்மாந்துறை வைத்தியசாலையிலிருந்து ஒரு உதவி வைத்தியர் வாரம் இரு முறை சாய்ந்தமருதுக்கு வந்து வைத்தியம் செய்வார். இங்கு நிரந்தரமான மருந்தகம் வேண்டும் என்ற போராட்டம் 1947ம் ஆண்டில் ஆரம்பித்தது. இதன் காரணமாக அவ் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கேட்முதலியார் M.S.காரியப்பர் தான் இக்கோரிக்கையை வென்று தருவதாக வாக்களித்தார்.பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதோடு அவருடைய கட்சி ஆட்சியும் அமைத்தது.சுகாதார அமைச்சர் SWRDபண்டார நாயக இக்கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய போதும் சாய்ந்தமருது கல்முனை வைத்தியசாலைக்கு 02 மைல் தொலைவுக்குள் அமைந்துள்ளது என்ற காரணம் காட்டி செயலாளர் தடுத்தார். ஆயினும் M.S.K.யின் பாராளுமன்ற வாதத் திறமையினால் இது வெற்றி கொள்ளப்பட்டு 1952இல் புதிய மத்திய மருந்தகம் சாய்ந்தமருதில் திறக்கப்பட்டது. புதிய மருந்தகத்தின் சேவைகள் திறம்பட நடைபெறுவதைக் கண்ணுற்ற மக்கள்
1957ம் ஆண்டில் இங்கு மகப்பேற்று மனையும் வேண்டும் எனக் கோரினர். இக் கோரிக்கைக்கும் MSK அனுமதி பெற்று அக்கால சுகாதார அமைச்சர் விமலா விஜயவர்தன மூலம் அடிக்கல் நாட்டினார். ஆயினும் மீண்டும் தடங்கல். 1957ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் மருந்தகத்திற்குச் செல்லும் பாதையில் தோணாவிற்கு மேல் அமைந்திருந்த பாலம் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் மகப்பேற்றுமனை கட்டட வேலைகள் தடைப்பட்டன.
1957ம் ஆண்டைய பெரு வெள்ளத்தின் பின் 15 ஆண்டுகளுக்கு மேல் இங்கு எவ்வித அபிவிருத்தி வேலைகளும் நடைபெறவில்லை.
1973ல் நான் இங்கு பொறுப்பதிகாரியாக வந்தபின் வைத்திய சாலை வீதியில் தோணாவுக்கு மேல் புதிய பாலம் போடப்பட்டது.மின்சாரம், தொலைபேசி வசதிகள் கிடைத்தன. சுற்றிவர மதில்கள் கட்டப்பட்டு கட்டடத் திருத்த வேலைகள் நடந்தன.
இதனைத் தொடர்ந்து வெளிநோயாளர் வருகை அதிகரித்தது.கிளினிக்குகளும் சீராக நடைபெற்றன.
இதனால் வைத்தியசாலை மீது பொது மக்களின் அக்கறை அதிகரிக்க ஆரம்பித்தது. அக்கால அரச சேவையாளர்களை ஒன்றிணைத்து விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பா.உ. M.C.அகமதுவின் நிதி ஒதுக்கீட்டில் மகப்பேற்றுமனை கட்டப்பட்டது.ஆயினும் மீண்டும் தடை ஏற்பட்டது. காரணம் 1977ம் ஆண்டின் பொதுத் தேர்தலும் 1978 இல் வீசிய புயலால் வைத்தியசாலைக் கட்டுமானங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுமாகும்.
1979 இல் மகப்பேற்றுமனை அக்காலப் பா.உ. A.R.மன்சூர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மகப்பேற்றுமனை திறந்து வைக்கப்பட்டபோதும் தாய்மார் உடனடியாக பிரசவத்திற்கு வரவில்லை. காரணம் அண்மையில் மையவாடி அமைந்திருப்பது.

ஆயினும் இலங்கையிலேயே முதன் முதலாக இங்கு ஆரம்பிக்கப்பட்ட வைத்திய சாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆகியோரின் முயர்ச்சியால் தாய்மார்கள் இங்கு பிரசவத்திற்கு வர ஆரம்பித்தனர். மிக விரைவில் இப்பிரதேசத்திலேயே கூடிய பிரசவம் நடக்கும் மகப்பேற்றுமனையாக இது திகழ்ந்தது.
1982ம் ஆண்டு அமைச்சர் A.R.மன்சூர் அவர்களின் அழைப்பின்பேரில் சுகாதார அமைச்சர் Dr.ரன்ஜித் அத்தப்பத்து அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட புதிய நோயாளர் விடுதிக்கான கட்டடம் 1985ம் ஆண்டில் திறந்து வைப்பதில் கலவரச்சூழல் காரணமாகத் தடையேற்பட்டது. ஆயினும் பின்னர் திறந்து வைக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டது.
1993 ம் ஆண்டு மாவட்ட வைத்தியசாலையாகத் தரமுயர்த்துவதர்க்காக கல்முனைக்குடி வைத்தியசாலையுடன் இணைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் தடுக்கப்பட்டன. ஆயினும் பின்னர் சாய்ந்தமருது வைத்தியசாலை மாவட்ட வைத்திய சாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது.

2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலை இவ்வைத்தியசாலைக்கு பேரழிவை ஏற்படுத்தியது.
சுனாமியின் பின்னர் இவ் வைத்தியசாலை யை மீளமைக்க எடுத்த முயற்சிகளுக்குப் பல தடைகள் ஏற்பட்டன.
தற்போதைய வைத்திய சாலை கட்டப்பட்டபின்னரும்கூட அதனைச் சரிவர நடாத்த ஆதரவு கிடைக்கவில்லை. உபகரணங்கள் சேவையாளர்கள் கூட வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டன.
மாவட்ட வைத்தியசாலை எனும் பெயர் பிரதேச வைத்தியசாலை என மாற்றப்பட்டபோதும் தகுந்த தரம் கொடுக்கப்படவில்லை.
கிழக்கு மாகாண சபை இவ்வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக தரமுயர்த்துவதை அங்கீகரித்த போதும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மிக அருகாமையில் உள்ளதால் முடியாது என்ற மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை கூறப்படுகின்றது.
2017இல் இவ்வைத்தியசாலயில் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு ஒன்றைத் தற்போதைய சுகாதார பிரதியமைச்சர் அமைக்க முன்வந்தபோதும் பின்னர் அது இவ்வைத்தியசாலையை AMH வைத்திய சாலையின் ஒரு பிரிவாக மாற்றுவதற்கான திட்டமே என்பதை உணர்ந்த மக்கள் அதனை எதிர்த்ததன்மூலம் அத்திட்டம் கைவிடப்பட்டது.
தற்போதைய நிர்வாகத்தின் கீழ் இவ்வைத்திய சாலையின் அபிவிருத்தியில் பல் வேறு துறையினரும் பங்களிப்புகள் செய்து இதனை மீண்டும் இப்பிரதேசத்தில் சிறந்த வைத்திய சேவைகளை வளங்கும் ஒரு நிலையமாக மாற்ற முயல்வது பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.
Dr.M.I.M.ஜெமீல்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top