கொழும்பில் இன்று அரசைக் கவிழ்க்க

கூட்டு எதிரணியின் பலப்பரீட்சை



கொழும்பு நகரத்தின் செயற்பாடுகளை முடக்கி , அரசாங்கத்துக்கு சவால் விடும் வகையில், கூட்டு எதிரணி இன்று கொழும்பில் பாரிய மக்கள் பேரணியை நடத்தவுள்ளது. இதற்கு இரகசியமான முறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைதியான முறையில் தாம் இந்தப் பேரணியை நடத்தவுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ள போதிலும், அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் போன்ற முக்கியமான இடங்களை முற்றுகையிட்டு அவற்றின் செயற்பாடுகளை முடக்கும் இரகசியத் திட்டம் கூட்டு எதிரணியிடம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், சட்டத்தை மீறினால் கடுமையான நடவடிக்கையில் இறங்கும் என்றும் பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.
எனினும் கூட்டு எதிரணி இந்தப் பேரணியை எங்கு நடத்தவுள்ளது என்று இன்னமும் அறிவிக்கவில்லை.
அரசாங்கம் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை பெற்று விடும் என்று காரணம் கூறிய கூட்டு எதிரணி, நேற்று பேரணி நடக்கும் இடம் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது.
எனினும், பேரணி நடக்கவுள்ள இடத்தை இன்னமும் இரகசியமாக வைத்திருப்பதால், சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
அதேவேளை, இன்று கொழும்பு நகரத்தை முடக்கி அரசாங்கத்தை நிலைகுலைய வைப்போம் என்று கூட்டு எதிரணியின் தலைவர்கள் சபதமிட்டுள்ளனர்.
இந்த பேரணியின் மூலம் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று நாமல் ராஜபக் கூறியிருக்கிறார்.
கூட்டு எதிரணி வெளியிடத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையானோரை ஒன்று திரட்டி கொழும்பு நகரத்தை முடக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சிறிலங்கா காவல்துறை பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top