கொழும்பில் பலத்த பாதுகாப்பு
கூட்டு எதிரணியின் இரகசியத் திட்டத்தை
தடுக்க நடவடிக்கை



அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணி கொழும்பில் இன்று நடத்தவுள்ள பேரணியை எதிர்கொள்ளும் வகையில் பொலிஸார் முழுமையான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸ் உயர் அதிகாரிகள் நேற்று மாலை நடத்திய கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கூட்டு எதிரணியினர் இன்னமும் தமது பேரணி செல்லும் பாதை மற்றும் கூட்டம் நடைபெறவுள்ள இடம் பற்றி அறிவிக்கவில்லை.
இதுவரை பொலிஸாருக்கு அதிகாரபூர்வமாக எந்த அறிவித்தலும் கொடுக்கப்படாத நிலையில், கூட்டு எதிரணி கூட்டம் மற்றும் பேரணியை நடத்தக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடல், நகர மண்டபம் மற்றும் கோட்டே நகரப் பகுதிகளில் முக்கியமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களை நோக்கி பேரணிகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளை, கம்பெல் பூங்கா,  கிருலப்பனை லலித் அத்துலத்முதலி மைதானம் ஆகிய இடங்கள், பேரணிகள் ஆரம்பிக்கும் இடங்களாக பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தில் அங்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, நாடாளுமன்றம் மற்றும் கொழும்பு நகரின் முக்கியமான இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
மேலதிக புலனாய்வு அதிகாரிகளும், கலகத் தடுப்பு அணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை கூட்டு எதிரணியின் இன்றைய பேரணியைத் தடுக்க  கொழும்பு நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெறுவதற்கு மூன்று தடவைகள் பொலிஸார் முனைந்த போதும், அவை வெற்றியளிக்கவில்லை.
மழலசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் வதிவிடத்தை முற்றுகையிட திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறி கறுவாத்தோட்டம் பொலிஸாரும், அதுபோன்ற காரணங்களுடன் வெலிக்கடை மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸாரும், கொழும்பு நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற முற்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top