மோடியிடம் சம்பந்தனும்டக்ளசும்

 முன்வைத்த கோரிக்கைகள்




சிறுபான்மையினருக்கு அதிகாரங்களை உடனடியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதன் அவசியம் உள்ளிட்ட, இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், இந்தியப் பிரதமருடன் நேற்று கலந்துரையாடப்பட்டதாக ஐஎஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு நேற்றுமுன்தினம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டது.
இந்தக் குழுவினர் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய அரசுத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதி மக்களுக்கு அதிகாரங்களை பகிர்வதற்கு, 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கொழும்பை, இந்தியா இணங்க வைக்க வேண்டும் என்று, குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோரியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, இரா.சம்பந்தனும், டக்ளஸ் தேவானந்தாவும், 1987ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை உடன்பாடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியதுடன், வடக்கு, கிழக்கிற்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், தமிழ்ப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மேலும் ஒரு இலட்சம் வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் தாம் கோரிக்கை விடுத்ததாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்கு இந்திய உதவி வழங்க வேண்டும் என்றும், பிராந்திய இணைப்பை ஏற்படுத்தும் வகையில் திருச்சிக்கும் பலாலிக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தாம் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top