இலங்கை தூதுவருக்கு மாலைதீவில்
 ஏற்பட்ட அவமானம்
நிகழ்வை புறக்கணித்து வெளியேறினார்

மாலைதீவில் சீனாவினால் கட்டப்பட்ட புதிய பாலத் திறப்பு விழாவின் போது, இலங்கை, பங்களாதேஷ் நாடுகளின் தூதுவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் நிகழ்வைப் புறக்கணித்து வெளியேறினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மாலைதீவின் தலைநகர் மாலேயையும் ஹுல்ஹுலே தீவையும் இணைக்கும் வகையில்,  2கி.மீ நீளமான பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு- சீன நட்புறவுப் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாலத்தை சீனா கட்டிக் கொடுத்துள்ளது. இந்தப் பாலத்தின் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது.
இதன்போது, மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீனின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தூதுவர்கள் பயணித்த வாகனத்தை- குறிப்பிட்ட தொலைவிலேயே மறித்து, நடந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
எனினும், சீனத் தூதுவரின் வாகனம் மறிக்கப்படாமல், தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தூதுவர்கள் நிகழ்வைப் புறக்கணித்து விட்டு, அங்கிருந்து திரும்பியுள்ளனர்.
இது பாரம்பரிய நட்பு நாடுகளை அவமதிக்கும் செயல் என்று மாலைதீவு எதிர்க்கட்சியின் பேச்சாளர் டிவிட்டர் பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த பாலத் திறப்பு விழாவுக்கு இந்தியத் தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top