ஞானசார தேரரை வைத்தியசாலையிலிருந்து
சிறைக்கு மாற்றத் தீர்மானம்
மாநாயக்க தேரர்கள் இணங்கினால் மட்டுமே
தான் அரை காற்சட்டையை அணிவேன் என
சிறை அதிகாரிகளிடம் கூறியுள்ளதாகவும் தெரியவருகிறது

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை இன்னும் ஒரு வாரத்தில், வைத்தியசாலையில் இருந்து சிறைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரரின் உடல் நலன் தேறிவருவதால், அவரை சிறைச்சாலைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் ஞானசார தேரருக்கு அரை காற்சாட்டை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதனை அணிய அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மாநாயக்க தேரர்கள் இணங்கினால் மட்டுமே தான் அரை காற்சட்டையை அணிவேன் என ஞானசார தேரர், சிறை அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது. அதனை விடுத்து எந்த காரணத்தை கொண்டும் காவியை கழற்ற போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகம் இது குறித்து சிறைச்சாலைகள் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஞானசார தேரர் அரை காற்சட்டை அணி மறுப்பது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிறைச்சாலை தலைமையகம் நீதியமைச்சிடம் வினவியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top