ஒரே நாளில் பறிபோன சம்மாந்துறை
முஸ்லிம், தமிழர்களின் 836 ஏக்கர் வயல் காணிகள்!



சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து அம்பாறை பிரதேசத்திற்கு பலவெளி வாய்க்கால் மேற்குப்புறம் சுமார் 836 ஏக்கர் காணிகளின் ஆவணங்கள் எவ்வாறு 24 மணித்தியாலயத்திற்குள் மாற்றப்பட்டது என்று காணிகளின் உறுதிகளைக் கொண்டுள்ள  மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கு இரண்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், மாவட்டத்துக்கு ஐந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும், இம்மாவட்டத்தின் பிரதேச சபைகளை சமமாக பகிர்ந்து கொண்ட கட்சிகளின் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருந்தும் இவ்வாறான செயற்பாடு இடம்பெறுவது ஏன் என்ற கேள்வியையும் மக்கள் எழுப்புகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
முஸ்லிம், தமிழ் மக்களுக்கு சொந்தமான பலவெளி வாய்க்கால் மேற்குப்புறம் உள்ள சுமார் 836 ஏக்கர் காணிகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் கடந்த 3 தினங்களாக விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளை சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியாமல் அம்பாறை பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் பாதிக்கப்பட்டிருக்கும் காணிச் சொந்தக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
1943ஆம் ஆண்டின் நில அளவை சான்றுகளுடன், தொடர்ச்சியாக விவசாயம் செய்து வந்த இக்காணிகள், யுத்த காலத்திலும் கூட எவ்வித தடங்கலுமின்றி விவசாயம் செய்துவந்த காணிகள் நல்லாட்சியில் பறிக்கப்பட்டதற்கு யார் காரணம்? அண்மையில் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தில் சம்மாந்துறையின் 10.28 .கி. பரப்பை கொண்ட 89 C, 89 B கிராம சேவகர் பிரிவுகள் அட்டாளைச்சேனை தொகுதியுடன் சேர்க்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.

தற்போது அம்பாறைக்கு மாற்றப்பட்டுள்ள காணிகள் இப்பிரதேசத்திற்குரியது என்பது மிக முக்கியமான விடயமாகும்.
நாடாளுமன்றத்தில் ஒன்றை காட்டி, கச்சேரியில் எல்லைகளை மாற்றும் நடவடிக்கைக்கு துணைபோனது மக்கள் பிரதிநிதிகளா? அல்லது சம்மாந்துறை அரச அதிகாரிகளா? ஏற்கெனவே கொண்டவட்டுவான் வரை இருந்த சம்மாந்துறை எல்லை சுருங்குவதற்கு எவ்வாறு செயற்பட்டதோ அவ்வாறே இன்றும் காய்நகர்த்தியுள்ளது அம்பாறை கச்சேரி.
இது சம்மாந்துறை காணிகளை இழந்த விவசாயிகளின் பிரச்சினை மாத்திரமல்ல, முஸ்லிம் சமூகத்தின் இருப்பு சம்மந்தமான பிரச்சினையுமாகும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top